திடீரென பாலஸ்தீன அதிபருடன் பேசிய பிரதமர் மோடி! இந்தியாவின் நிலைப்பாடு என்ன! இது முக்கியம் ஆச்சே
டெல் அவிவ்: காசாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் பல நூறு பேர் உயிரிழந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இப்போது பாலஸ்தீன அதிபருடன் தொலைப்பேசி வழியாக உரையாடினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான யுத்தம் கடந்த 10 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் படை முதலில் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி தரும் நடவடிக்கைகளை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.

இந்தச் சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசாவில் உள்ள மருத்துவமனையில் திடீரென ஏவுகணை தாக்கியது. இதில் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காசா தாக்குதல்: இதற்கிடையே காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் தொலைப்பேசி மூலம் பிரதமர் உரையாடினார். அப்போது காசா மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தோர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்த பிரதமர் மோடி, இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "பாலஸ்தீன தலைவர் ஹெச்.இ. மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கலைத் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நாங்கள் தொடர்ந்து அனுப்புவோம். பயங்கரவாதம், அப்பகுதியில் நிலவும் வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்தோம். இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்" என்று அவர் தெரிவித்தார்.
முதல்முறை: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் 10 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. அந்த போர் தொடங்கிய பிறகு பாலஸ்தீன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேசுவது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக பிரதமர் மோடி ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடமும் பேசி இருந்தார். காசா மருத்துவமனை தாக்குதலில் பல நூறு பேர் கொல்லப்பட்ட நிலையில், இது குறித்தும் பிரதமர் மோடி தனது கவலையும் பதிவு செய்தார். காசா மருத்துவமனை தாக்குதலை யார் நடத்தியது என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
காசா மருத்துவமனை தாக்குதல்: ஒரு பக்கம் ஹமாஸ் படை இஸ்ரேல் ஏவுகணை தான் காசா மருத்துவமனையைத் தாக்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால், இதை மறுக்கும் இஸ்ரேல் ஹமாஸ் படை அனுப்பிய ஏவுகணையே எதிர்பாராத விதமாக மருத்துவமனையைத் தாக்கியதாகக் கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இஸ்ரேல் ஹமாஸ் படைப் போர் தொடங்கிய சமயத்தில் இஸ்ரேலுக்குத் துணை நிற்பதாகப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அப்போது இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதில் விவாதம் எழுந்தது. இந்தியா இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரண்டிற்கும் பிரதமர் மோடி நேரில் சென்றிருந்தார்.
இந்தியாவின் நிலைப்பாடு: அதேநேரம் பாலஸ்தீனர்கள் உடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளது. கடந்த 2017இல், ஜெருசலேம் முழுவதையும் இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவாகத் துணை நிற்போம் எனக் கூறி சில நாட்களுக்குப் பிறகு மத்திய அரசு மற்றொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா முழு நம்பிக்கை வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.
மேலும், பாலஸ்தீனம், இஸ்ரேல் அருகருகே சமாதானமாக நீட்டிக்க நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்துவதாகவும் கடந்த காலங்களிலும் இதுவே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துள்ளதாகவும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications