புரோட்டோகாலை மாற்றிய புதின்.. பம்மிய டிரம்ப்! அலாஸ்கா சந்திப்பை தொடர்ந்து நடந்த சம்பவம்!
அலாஸ்கா: உலக நாடுகள் உற்று கவனித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு பல்வேறு முக்கியத்துவங்களைப் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு வழக்கமாக பின்பற்றப்படும் புரோட்டோகால் மாற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து அலாஸ்காவில் வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வழக்கமான புரோட்டோகாலை மீறி முதலாவதாக உரையாற்றினார். 2018க்குப் பிறகு அமெரிக்க அதிபருடன் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்ற முதல் சந்திப்பு இது.
பொதுவாக அமெரிக்காவில் நடக்கும் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்புகளில் அமெரிக்க அதிபரே முதலில் உரையாற்றுவார். ஆனால், இந்த முறை ரஷ்ய அதிபர் புதின் முதலில் மைக்கைப் பிடித்து பேசத் தொடங்கினார். அதன்பிறகே அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். இது அமெரிக்க ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.
உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில், தனக்கும் டிரம்புக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறினார். மேலும் இந்த புதிய முன்னேற்றத்தை நாசமாக்க வேண்டாம் என்று ஐரோப்பாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
டிரம்ப் பேசுகையில், "ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை அதில் எந்த முடிவும் இல்லை" என்றார். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் விரைவில் பேச திட்டமிட்டுள்ளதாகவும், இங்கு நடந்த விவாதங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக இது அமைந்ததாகவும், பல முக்கிய விவகாரங்களை தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார் டிரம்ப். ஆனால் மேலும் சில விஷயங்கள் விடுபடுவிட்டன, அவற்றை சரி செய்ய மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த இடத்தை அடைய முடியவில்லை எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications