"அலறிய தெற்கு இஸ்ரேல்.." போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில நிமிடங்களில் ஒலித்த அபாய சைரன்! பரபரப்பு
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில், தெற்கு இஸ்ரேல் கிராமத்தில் திடீரென ஏவுகணை குறித்த சைரன் அலறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகச் சண்டை தொடர்ந்து வந்தது. கடந்த அக். 7ஆம் தேதி முதலில் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. மேலும், பலரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது.

அப்போது இந்த சண்டை தொடங்கிய நிலையில், காசா மீது இஸ்ரேல் சரமாரியான தாக்குதல் நடத்தியது. காசாவில் உள்ள பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
தாக்குதல்: இதற்கிடையே நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் ஹாமஸ் இடையே தற்காலிக சண்டை நிறுத்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது. கத்தார் மத்தியஸ்தானத்தில் இந்த சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. மொத்தம் நான்கு நாட்கள் இந்த சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும் சூழலில், பிணைய கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க உள்ளது. சுமார் ஏழு வாரங்களுக்குப் பிறகு இந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காசாவில் இன்று தொடங்கும் போர் நிறுத்தம்.. இஸ்ரேலுக்கு ஹமாஸ் போட்டுள்ள கண்டிஷன்கள் என்னென்ன! பரபர
இந்த போர்நிறுத்தம் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்குத் தொடங்குகிறது. போர் நிறுத்தம் தொடங்கி, சில மணி நேரம் கழித்தே, இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பிணையக் கைதிகளை விடுவிக்க உள்ளனர். முதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பெண்கள் மற்றும் குழந்தைகளை ஹமாஸ் விடுவிக்கும். நான்கு நாட்களில் மொத்தம் 50 பிணையக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க உள்ளது.
பிணையக் கைதிகள்: பிணையக் கைதிகளில் யார் விடுவிக்கப்பட உள்ளனர் என்ற தகவல் இஸ்ரேலுக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கியுள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அதேபோல இஸ்ரேல் வசம் இருக்கும் பாலஸ்தீனர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இதற்கான ஒப்புதல் கிடைத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் எத்தனை கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல், தரை வழித் தாக்குதல் என எதையும் நடத்தக் கூடாது. அடுத்த நான்கு நாட்களுக்கு இது முழுமையாகப் போர் நிறுத்தமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டிரோன் தாக்குதல்களையும் நடத்தக் கூடாது. இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் பீரங்கிகளும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குத் திரும்பின.
அலறிய சைரன்: இதற்கிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் திடீரென காசா பகுதிக்கு அருகில் உள்ள இரண்டு தெற்கு இஸ்ரேலிய கிராமங்களில் அபாய சைரன்கள் ஒலித்துள்ளன. பொதுவாக ஏவுகணை தாக்குதல் நடந்தால் மட்டுமே இந்த அபாய சைரன் அலறும். அப்படியிருக்கும் போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததும் சைர் அடித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
காசா பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல் காரணமாக இந்த சைரன் அடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், ராக்கெட் தாக்குதல்கள் நடந்ததா இல்லை வேறு எந்த காரணத்திற்காக இந்த சைரன் அடித்ததா என்பது குறித்து உடனடியாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.













Click it and Unblock the Notifications