ஈரானை காப்பாற்றிய ரஷ்யா - சீனா.. ‘வீட்டோ'வால் வீழ்த்தப்பட்ட தீர்மானம்.. ஐநாவில் என்ன நடந்தது?
ஜெனீவா: 'ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும்' என்று ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது. அதோடு இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால் தேவையின்றி பதற்றம் அதிகரிக்கும் என்று இருநாடுகளும் தெரிவித்து ஈரானுக்கு ஆதரவாக நின்றுள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதனால் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன் உள்பட பல அரபு நாடுகளின் வர்த்தகம் முடங்கி உள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் செல்லும். ஆனால் ஈரான் மூடியுள்ளதால் அந்த நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
உலகில் தினமும் 20 சதவீத அளவிலான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டதால் நம் நாடு, சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்பட பல ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போது இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் முழுமையாக ஹார்முஸ் ஜலசந்தியல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வரவில்லை.
இப்படியான சூழலில் தான் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை பஹ்ரைன் கொண்டு வந்தது. அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இந்த கடல் வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்துக்கு ஒவ்வொரு நாடுகளும் தற்காப்பு வழிமுறைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் இதற்காக தனிப்படை அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கோரப்பட்டு இருந்தது.
இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 2 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 2 நாடுகள் எதிராக வாக்களித்தன. அதன்படி ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோற்கடித்தன.
மேலும் இந்தத் தீர்மானம் என்பது ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பிரச்சனையின் அடிப்படை காரணங்களை மையப்படுத்தி இருக்கவில்லை. மாறாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால் அது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று ரஷ்யாவும் சீனாவும் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications