"74 ராணுவ தளங்கள் அழிப்பு.. உக்ரைன் போரின் முதல் நாள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.." ரஷ்ய ராணுவம்
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாகக் கடந்த சில நாட்களாகவே உலக நாடுகள் எச்சரித்து வந்தன. அதற்கேற்ப ரஷ்யாவும் இன்று உக்ரைன் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும், இதற்கெல்லாம் ரஷ்யா அஞ்சுவதாகத் தெரியவில்லை.

வெற்றிகரமான நாள்
ரஷ்யா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப்புறத்தில் ரஷ்யா ராணுவம் நுழைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் பகுதிகளில் இருந்து ரஷ்யா குண்டுமழை பொழிந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக செர்னோபில் அணு ஆலை பகுதியின் அருகிலும் கடும் சண்டை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

74 ராணுவ தளங்கள் அழிப்பு
இந்நிலையில், உக்ரைன் படையெடுப்பின் முதல் நாள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் 11 விமானப்படைத் தளங்கள் உட்பட 74 ராணுவ தளங்களை அழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா ராணுவம் காலை முதல் குறைந்தது 203 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் போலீஸ் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

அவசர நிலை பிரகடனம்
ரஷ்யா ராணுவத்தின் தாக்குதல் தொடரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-இல் ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நகர மேயர் அறிவித்துள்ளார். இதனிடையே தெற்கு ஒடெசா உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்த ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டில் உள்ள ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதாக விளக்கி உள்ளது.

உலக நாடுகள்
இதனிடையே 14 பேருடன் சென்ற உக்ரைன் ராணுவ விமானம், தலைநகர் கீவ் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் உக்ரைன் முழுக்க பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் வான்வழியும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் வெளிநாட்டினரை மீட்க உலக நாடுகள் வேறு வழிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications