உலகின் மிகவும் ஆபத்தான ஏவுகணையை டெஸ்ட் செய்து பார்த்த ரஷ்யா! மணிக்கு 24,000 கி.மீ வேகம்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்தம் வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நேரத்தில் மணிக்கு சுமார் 24,000 கி.மீ வேகத்தில் பாயும் அதி ஆபத்தான ஏவுகணையை ரஷ்யா சோதித்து பார்த்திருக்கிறது. புதினின் இந்த செயல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஏவுகணையை உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை என்று புடின் வர்ணித்துள்ளார். மேற்கத்திய நாடுகளிடம் உள்ள எந்தவொரு சக்திவாய்ந்த ஏவுகணையை விடவும், இது 4 மடங்கு அதிக அழிவுத்திறன் கொண்டது என்று ரஷ்யா சொல்கிறது.

இதற்கு RS-28 Sarmat என்று பெயர். ஆனால், அமெரிக்கா இதனை Satan II என்று குறிப்பிடுகிறது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் தன்மை கொண்டது. இது சுமார் 208 டன் எடையும், 35 மீட்டர் நீளமும் கொண்டது. தற்போது செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளிலேயே இதுதான் மிகப்பெரியது. இந்த ஏவுகணையால் 10 டன் வரையிலான வெடிபொருட்களைச் சுமந்து செல்ல முடியும்.
இதில் MIRV தொழில்நுட்பம் உள்ளது. அதாவது, ஒரே ஒரு ஏவுகணை விண்ணில் பாய்ந்து, பிரிந்து சென்று ஒரே நேரத்தில் 10 முதல் 16 வெவ்வேறு இடங்களைத் துல்லியமாகத் தாக்கும். இது ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் அதாவது மணிக்கு 24,000 கி.மீ பயணிக்கும். இதனால் எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இலக்கை நோக்கிச் செல்லும்போது திசையை மாற்றிக்கொண்டே செல்லும் 'அவன்கார்ட்' எனப்படும் அதிவேக ஊர்திகளை இது சுமந்து செல்லும். எனவே இதன் பாதையையும் கணிக்க முடியாது. சிம்பிளாக சொல்வதெனில், இதுதான் உலகத்தில் இருப்பதிலேயே தடுக்க முடியாத, நிறுத்த முடியாத பயங்கர ஆயுதம்.

இதன் தாக்கும் தூரம் 18,000 கி.மீ முதல் 35,000 கி.மீ வரை இருக்கும் என புடின் கூறியுள்ளார். அதாவது, ரஷ்யாவில் இருந்து ஏவினால் பூமியின் எந்த மூலையையும் இது தாக்கும். பூமியின் சுற்றளவே சுமார் 40,075 கி.மீ தான். எனவே, 35,000 கி.மீ வீச்சு என்பது இந்த ஏவுகணை பூமியை கிட்டத்தட்ட ஒருமுறை சுற்றி வந்து எந்த திசையிலிருந்தும் ஒரு இலக்கைத் தாக்க முடியும் என்பதைக் குறிக்கிறது.
அமெரிக்காவின் நியூயார், வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களையும், ஐரோப்பாவின் லண்டன், பாரிஸ், பெர்லின், நேட்டோ அமைப்பின் தலைமையகம் அமைந்திருக்கும் புருசெல்ஸ் நகரங்களையும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.

மற்றொரு பிளஸ் பாயிண்ட் என்னவெனில், வழக்கமான ஏவுகணைகள் வடதுருவப் பாதை வழியாகச் செல்லும். ஆனால், இது தென்துருவம் வழியாகச் சென்று அமெரிக்கா போன்ற நாடுகளின் ரேடார்களை ஏமாற்றும் திறன் கொண்டது. எதிரி நாடுகளின் ஏவுகணை எதிர்ப்பு கவசங்களை முறியடிக்க இதில் ஏமாற்று இலக்குகள் மற்றும் மின்னணு போர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் GLONASS செயற்கைக்கோள் அமைப்பு மூலம் இது வழிநடத்தப்படுகிறது. சிக்னல்கள் ஜாம் செய்யப்பட்டாலும் இது இலக்கை நோக்கிச் செல்லும். இப்பேர்பட்ட ஏவுகணையைதான் தற்போது ரஷ்யா சோதனை செய்து பார்த்திருக்கிறது.












Click it and Unblock the Notifications