உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கினால்... கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் - அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் எனவும் ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் அப்பாவி பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. 50 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் போரினால் இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளதை தொடர்ந்து, அங்கு உக்ரைன் போலீசார் மற்றும் ராணுவம் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன.

கொத்து கொத்தாக உடல்கள்
இதுவரை 900க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கீவ் பிராந்திய போலீஸ் படை தலைவர் ஆன்ட்ரிய் நெபிடோவ் கூறியுள்ளார். தெருக்களிலும், தற்காலிக புதைகுழிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த உடல்களில், துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் மக்களை தெருக்களில் நிற்க வைத்து ரஷ்ய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

புச்சா நகரில் உடல்கள்
புச்சா நகரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவிலும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெலன்ஸ்கி கோரிக்கை
ரஷ்யாவை பயங்கரவாதத்தின் அரச ஆதரவாளராக நியமிக்குமாறு அமெரிக்காவிடம் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனிடம் பேசும் போது ரஷ்யாவை "பயங்கரவாதத்தின் அரசு ஆதரவாளராக" அறிவிக்கமாறு வேண்டுகோள் விடுத்ததாக மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா கப்பல் தாக்குதல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யக் கடற்படையின் முக்கிய கப்பல்களில் ஒன்றான மோஸ்கவா கப்பலைக் குறி வைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட தீவிபத்தில் அந்தக் கப்பல் மிக மோசமாகச் சேதமடைந்து உள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த இந்த கப்பல் அப்படியே மூழ்கிவிட்டது.

அமெரிக்கா
ரஷ்ய கப்பல் மோஸ்க்வா மீது உக்ரைன் 2 ஏவுகணைகளை தாக்கியதாக அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மூழ்கிய ரஷிய ஏவுகணை கப்பல் ‘மோஸ்க்வா' இரண்டு உக்ரைன் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தற்போது நம்புகிறது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யா கொந்தளிப்பு
ரஷ்யாவின் இந்த மோஸ்கவா கப்பலை தாங்கள் தான் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், ரஷ்யா தங்கள் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மோஸ்கவா கப்பலில் மோசமான தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே இந்த கப்பல் மூழ்கியதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது ரஷ்யா ராணுவத்திற்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடாது தாக்கும் ரஷ்யா
கீவ் நகரில் இருந்து ரஷ்யா தனது ராணுவத்தைக் குறைத்துக் கொண்டது. அதேநேரம் உக்ரைனின் மரியுபோல் நகரைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியில் ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
Recommended Video

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால், கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. போர் நீடிப்பது உலக பொருளாதாரத்தில் கடும் விளைவை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications