அதிநவீன ஆயுதங்களுடன் காத்திருக்கும் ரஷ்யா! உக்ரைன் எல்லையில் என்ன நடக்கிறது? பரபர சாட்டிலைட் படங்கள்
மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து பின்வாங்கி வருவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், அங்குள்ள உண்மையான நிலையை விவரிக்கும் வகையிலான சாட்டிலைட் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் கூட பெரும் பதற்றமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே உயரத் தொடங்கிவிட்டது. இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், அது சர்வதேச பொருளாதாரத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

உக்ரைன்
சோவியத் ஒன்றியத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யா, உக்ரைன் புவியியல் ரீதியாகவும் சரி, கலாசார ரீதியாகவும் சரி ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது. எனவே, ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக உக்ரைன் இருக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக உக்ரைன் மேற்குலக நாடுகளுடன் நெருக்கமான உறவை வைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக உக்ரைன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ரஷ்யா மறுப்பு
ரஷ்யாவுடன் எல்லையைப் பகிரும் உக்ரைன் நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் என எதில் இணைந்தாலும், அது அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் ரஷ்ய புதின் கருதுகிறார். எனவே, நேட்டோவை விரிவுபடுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ரஷ்யா, தனது படைகளைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற மேற்குலக நாடுகளின் எச்சரிக்கையை ரஷ்யா தொடர்ந்து மறுத்தே வருகிறது.

புதிய சாட்டிலைட் படங்கள்
இந்தச் சூழலில் உக்ரைன் எல்லையில் அமைந்திருந்த படைகளில் ஒரு பகுதியைத் திரும்ப அழைத்துக் கொண்டதாக ரஷ்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் போர் பதற்றம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அமெரிக்காவின் Maxar Technologies வெளியிட்டுள்ள புதிய சாட்டிலைட் படங்கள் பெலாரஸ், மேற்கு ரஷ்யா, கிரிமியா பகுதிகளில் ரஷ்யா படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

எல்லை பகுதிகள்
குறிப்பாக கிரிமியா பகுதியில் இருந்த ராணுவம் வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா அறிவித்த நிலையில், அங்குள்ள ரயில்வே பகுதியில் ராணுவ வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதை இந்த புதிய சாட்டிலைட் படங்கள் காட்டுகிறது. அதேபோல பெலாரஸ் பகுதிகளிலும் ரஷ்யா தொடர்ந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அங்கு உக்ரைனின் எல்லையிலிருந்து வெறும் 6 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய ராணுவ மருத்துவமனையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள விமானநிலையத்தில், குறைந்தது 20 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டுள்ளது இந்த புதிய சாட்டிலைட் படங்களில் தெரிகிறது.

பெரியளவில் உதவும்
இவை தவிர அதிக எண்ணிக்கையில் ராணுவ வீரர்களையும் ரஷ்யா அப்பகுதியில் குவித்து வருகிறது. பெலாரஸ்-உக்ரைன் எல்லையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ப்ரிபியாட் ஆற்றின் மீது ரஷ்யா ஒரு புதிய தற்காலிக பாலத்தைக் கூட கட்டியுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவால் மிக எளிமையாகவும் வேகமாகவும் உக்ரைன் அருகே தனது டாங்கி, பீரங்கிகளை எடுத்துச் செல்ல முடியும், போர் ஏற்படும் போது இந்தப் பாலம், ரஷ்யாவுக்குப் பெரியளவில் உதவும் என்றே வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

அமெரிக்கா கருத்து
உக்ரைன் மீது போர் தொடுக்க மாட்டோம் என்றும் ராணுவத்தைத் திரும்பப் பெறும் பணிகளைத் தொடங்கிவிட்டோம் என்றும் ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தாலும் கூட, அதன் நடவடிக்கைகள் அதற்கு நேர்மாறாகவே உள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், "ரஷ்யா சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே உள்ளது. சொல்லப்போனால் சில முக்கிய பகுதிகளில் ரஷ்யா ராணுவம் தொடர்ந்து உக்ரைனை நோக்கி முன்னேறுகிறதே, தவிரப் பின்வாங்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications