சென்னை-கொழும்பு விமானத்தில் பஹல்காம் பயங்கரவாதிகள் சென்றார்களா? பாதுகாப்பு படை தீவிர சோதனை
கொழும்பு: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொழும்பு விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா தெரிவித்து இருந்தது.

மேலும் பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தம், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் என பல அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என தெரிகிறது.
பாகிஸ்தானும் இதனால் அலறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வந்த சென்னை விமானத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL122 பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சென்றதாக தகவல் வெளியான நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து தப்பியதாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்ததால், கொழும்பு பண்டாரநாயகே விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை நேரப்படி 11.59 மணிக்கு இந்த விமானம் வந்து இறங்கியதும் பாதுகாப்பு படை அதிகாரிகள் திவீர சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே பயங்கரவாதிகள் சென்னையில் இருந்து விமானத்தில் இலங்கை தப்பி செல்வதாக சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது போலி இ-மெயில் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications