என்னதான் நடக்குது? துருக்கியை தொடர்ந்து.. அடுத்தடுத்து பல நாடுகளில் நிலநடுக்கம்.. ஏன் ஏற்படுகிறது?
நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அன்காரா: உலக அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து சிறிதும், பெரியதுமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன.
துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
துருக்கியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கம் காரணமாக படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து உள்ளனர்.

நிலநடுக்கம்
துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. சிரியாவில் இதுவரை 5 ஆயிரம் பேர் நிலநடுக்கம் காரணமாக பலியாகி உள்ளனர். துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன. துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும். துருக்கி நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டு உள்ளது. அதாவது 100 கிமீ தூரத்திற்கு தரையில் அடுக்குகள் இரண்டாக பிளந்து நகர்ந்து உள்ளன.

நிலநடுக்கம்
100 கிமீ தூரத்திற்கு நில அடுக்குகள் பிரிந்து பிளவுபட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு மோசமான நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தோடு இல்லாமல் அடுத்தடுத்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

உயிரிழப்பு
அதேபோல் இன்று பிலிப்பைன்சில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நேற்று முதல்நாள் ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் நேற்று 4.8 அளவில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. டாங்கோவில் நேற்று 5.3 ரிக்டர் அளவில் கூடுதலாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

3 நாட்கள்
இதெல்லாம் கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள். சிரியா - துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் வரிசையாக அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூமியின் நிலநடுக்கங்கள் ஒன்றாக இல்லாமல் திடீரென நகர்ந்து செல்வதுதான் நிலநடுக்கம். பூமி அடுக்குகளில் திடீர் நகர்தல்தான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இந்த துருக்கி நிலநடுக்கத்தில் அரேபியன் பிளேட் அன்டோலியன் பிளேட் மீது நகர்ந்து உள்ளது. அடுத்தடுத்து மூன்று முறை இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதோடு ஒரு முறை பிளேட் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் பிளேட்களும் நகரும் சூழ்நிலை ஏற்படும்.

விளைவா?
இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும். இதன்பின் இந்த நிலநடுக்கம் முடிந்தும் சிறிய அளவிலான நகர்வுகள் இருக்கும். இதை ஆப்டர் எபக்ட் என்றும் கூறுவார்கள்.துருக்கி நிலநடுக்கத்தில் இப்படித்தான் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். இங்கே வெளியே தெரிந்த நிலநடுக்கத்தை விட தெரியாத நிலநடுக்கங்கள் 5-6 சிறிய அளவில் இடை இடையே ஏற்பட்டு உள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக தற்போது உலக அளவிலும் பல்வேறு நில அடுக்குகள் நகர்கின்றதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சிரியா - துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக மற்ற நாடுகளிலும் அடுக்குகள் நகர தொடங்கி உள்ளதோ, அதனால்தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது சர்வதேச அளவில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களுக்கு சர்வதேச வல்லுநர்கள் எந்த விதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications