"எனக்கு மரண தண்டனையா?" தீர்ப்பு வந்தவுடன் ஆவேசமான ஹசீனா.. வங்கதேச அரசுக்கு எதிராக பகீர் அறிக்கை
டாக்கா: வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த வன்முறை தொடர்பாக நடந்த விசாரணையில் மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் பரபரப்பான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தத் தீர்ப்பு வந்த பிறகு ஷேக் ஹசீனா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு திடீரென இளைஞர்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டுச் சுதந்திர போராளிகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெடித்த போராட்டம், அப்படியே ஹசீனா அரசுக்கு எதிராகத் திரும்பியது. இதனால் அங்கு மிக மோசமான வன்முறை வெடித்த நிலையில், ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

மரண தண்டனை
இப்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கிறது. இதற்கிடையே கடந்தாண்டு நடந்த வன்முறை தொடர்பாக விசாரித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹேஷ் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவருக்கு மரணத் தண்டையும் விதித்தது. இதனால் வங்கதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹசீனா
இதற்கிடையே இந்தத் தீர்ப்பு வந்த பிறகு ஷேக் ஹசீனா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்த அவர், தனக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சாடினார். ஷேக் ஹசீனா மேலும் கூறுகையில், "தேர்ந்தெடுக்கப்படாத அரசின் தலைவர்களின் கொடூரமான மற்றும் கொலைவெறி நோக்கத்தை தான் இது காட்டுகிறது.
இந்த நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் பகிரங்கமாகவே தற்போதைய நிர்வாகத்திற்கு ஆதரவாகக் கருத்து சொன்னவர்கள். எனவே, அவர்கள் பாரபட்சமாகவே இந்த வழக்கை விசாரித்துள்ளனர். சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் என் மீது சுமத்திய எல்லாக் குற்றச்சாட்டுகளையும் நான் முழுமையாக மறுக்கிறேன். கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த அரசியல் மோதல்களில் இரு தரப்பிலும் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்காகவும் நான் வருந்துகிறேன்.
நடுநிலை இல்லை
ஆனால், நானும் மற்ற தலைவர்களும் போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிடவில்லை. நீதிமன்றத்தில் என்னைத் தற்காத்துக் கொள்ள நியாயமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. நான் சில வழக்கறிஞர்களைத் தேர்வு செய்திருந்தேன்.. ஆனால், அவர்களைக் கூட என் சார்பில் ஆஜராக அனுமதிக்கவில்லை. இந்தச் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் சர்வதேச தரத்திலும் இல்லை.. நடுநிலையாகவும் இல்லை. உண்மைக்கு மாறாகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
3 பாயிண்டுகள்
மேலும், ஷேக் ஹசீனா மறுக்க முடியாத உண்மைகள் எனச் சொல்லி மூன்று விஷயங்களைச் சுட்டிக்காட்டினார்:
- நியாயமான விசாரணை தேவை என சொன்ன மூத்த நீதிபதிகள் அல்லது மூத்த வழக்கறிஞர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர் அல்லது மிரட்டி அமைதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
- இந்த தீர்ப்பாயம் அவாமி லீக் உறுப்பினர்களை மட்டுமே குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
- மதச் சிறுபான்மையினர் மீதான வன்முறைகளில் ஈடுபட்ட மற்ற கட்சிகளைச் சேர்ந்த குற்றவாளிகளை விசாரிக்கவோ அல்லது தண்டிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று 3 பாயிண்டுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
சவால்
முகமது யூனுஸ் தலைமையிலான குழப்பமான இடைக்கால அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து வங்கதேச மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் ஷேக் ஹசீனா கூறினார். அவர் மேலும், "இந்தச் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாய விசாரணைகள் ஒருபோதும் நீதியை நிலைநாட்டுவதற்காக இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அவாமி லீக்கைப் பலிகடா ஆக்குவதும், யூனுஸின் தோல்விகளை மறைப்பதும் மட்டுமே இதன் நோக்கம்" என்றார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வங்கதேச நீதிமன்றம்
பெயரில் சர்வதேசம் என்று இருந்தாலும் கூட இப்போது ஹசீனா மீதான வழக்கை விசாரித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் என்பது வங்கதேசத்தில் உள்ள உள்நாட்டு நீதிமன்றம். அங்கு நடக்கும் போர்க் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கும். இது வங்கதேச அரசின் கட்டுப்பாட்டிலேயே வருமே தவிரச் சர்வதேச அமைப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications