விரட்டப்பட்ட ஷேக் ஹசீனா.. மாணவர்களின் அடுத்த திட்டம் இதுதான்! மொத்தமாக மாறப்போகும் வங்கதேச அரசியல்
டாக்கா: வங்கதேச அரசியலையே மாணவர்களின் போராட்டம் புரட்டிப்போட்டுள்ளது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேற வைத்தது மாணவர்களின் போராட்டம் தான். இந்நிலையில் தான் மாணவர்கள் அடுத்த திட்டம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் வங்கதேசத்தின் மொத்த அரசியலும் முற்றிலுமாக மாறும். இதனால் இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் வங்கதேசத்தில் மாணவர்களின் செயல்பாட்டை உற்று கவனிக்க தொடங்கி உள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது முதல் அவாமி லீக், பிஎன்பி எனும் வங்கதேச தேசியவாத கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இடையில் அவ்வப்போது ராணுவ ஆட்சியும் நடந்தது. அதன்பிறகு கடந்த 2009 முதல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆட்சி தான் நடந்து வந்தது.

ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தார். இந்நிலையில் தான் 15 ஆண்டு தொடர் ஆட்சிக்கு கடந்த 5ம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை தனி நாடாக்க போராடிய தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கல்லூரி மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் ஒரு மாதத்தை தொடர்ந்து நடந்த நிலையில் ஜூலை இறுதியில் தீவிரமானது. இதையடுத்து வன்முறை வெடித்தது. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் திரும்பினர். இதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அவசர அவசரமாக உயிருக்கு பயந்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார். இதில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய காரணமாக போராட்டத்தை முன்னெடுத்த 2 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். 26 வயது நிரம்பிய டாக்கா பல்கலைக்கழக மாணவர்களான நஹித் இஸ்லாம் மற்றும் ஆசீப் மஹ்மூத் ஆகியோர் இந்த இடைக்கால அரசில் அமைச்சர்களாகவும், ஆலோசகர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
ஷேக் ஹசீனாவை அலறவிட்ட 2 மாணவர்கள்.. தேடிப்போன பதவி! 15 ஆண்டு சாம்ராஜ்யம் 5 நாளில் சரிந்தது எப்படி?
தற்போது மாணவர்கள் போராட்டத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். வங்கதேசம் தனி நாடாக பாகிஸ்தானை எதிர்த்து போரிட்ட பிறகு ஒரு போராட்டத்தில் அதிகமானவர்கள் பலியாகி இருப்பது இப்போது தான். இதனால் இந்த போராட்டத்தை மாணவர்கள் ‛ஜென் இசட் புரட்சி’ (Gen Z revolution) என்று அழைக்கின்றனர். இத்தகைய சூழலில் தான் தற்போது போராட்டம் நடத்தி ஷேக் ஹசீனாவின் பதவியை பறித்து நாட்டை விட்டு வெளியேற்றிய மாணவர்கள் புதிய திட்டத்தை கையில் வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வங்கதேசத்தை பொறுத்தவரை மொத்தம் 2 கட்சிகள் தான் பிரதான கட்சிகளாக உள்ளது. ஒன்று ஷேக் ஹசீனாவின் அவாமி லீக். மற்றொன்று முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பிஎன்பி எனும் வங்கதேச தேசியவாத கட்சி. இவர்கள் 2 பேருக்கும் தற்போது 70 வயதை கடந்துவிட்டது. மேலும் தற்போது வங்கதேச அரசின் இடைக்கால தலைவராக உள்ள முகமது யூனிசுக்கு 81 வயது ஆகிறது.
இதனால் போராட்டத்தை தொடங்கிய மாணவர்கள் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் வங்கதேசத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த தேர்தலை எதிர்கொள்ளவும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் மற்றும் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சிகள் தயங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் மாணவர்கள் புதிய கட்சியை தொடங்கி அரசியலில் பயணிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பான தகவல்களை மாணவர்களின் போராட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக வங்கதேசத்தின் நிலைமை மோசமாகி விட்டது. இதுபோன்று இனி நடக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் ஷேக் ஹசீனா 170 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) மக்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். இதனால் மக்கள் மீதான கோபம் அவரை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அரசு, ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு வரும் மாணவர்களின் தகவல் தொடர்பு குழுவின் தலைவர் மஹ்ஃபுஜ் ஆலம் கூறுகையில், ‛‛அரசியல் கட்சி தொடங்குவது பற்றி இன்னும் ஒரு மாதத்தில் முடிவு எடுக்கப்படும். அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களிடம் கலந்தாலோசிக்க விரும்புகிறோம். மக்கள் உண்மையில் 2 அரசியல் கட்சிகளை நம்பி சோர்வடைந்துள்ளனர். இதனால் அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்’’ என்றார்.
அதேபோல் ஹசீனாவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க உதவிய மற்றொரு மாணவர் ஒருங்கிணைப்பாளரான தஹ்மித் சவுத்ரி கூறுகையில், ‛‛அரசியல் கட்சியை தொடங்க அதிக வாய்ப்புள்ளது. இந்த அரசியல் கட்சி என்பது மதசார்பின்மை, பேச்சு சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டாக இருக்கும். கட்சி உருவாக்காமல் நாடு முழுவதும் நல்லது செய்ய முடியாது. இதனால் கட்சி உருவாக்கப்படும். வேறு எந்த திட்டமும் எங்களிடம் இல்லை’’ என்றார்.
இதுபற்றி இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ள மாணவரும், ஆலோசகரான நஹிம் இஸ்லாம் கூறுகையில், ‛‛வங்கதேசத்தில் இனி எந்த பாசிச வாதியும், எதேச்சதிகார போக்கை பின்பற்றுபவரும் திரும்பவர முடியாது. எங்களின் எண்ணம் என்பது வங்கதேசத்தை உருவாக்குவதாகும். எங்களை பொறுத்தவரை நாட்டின் கட்டமைப்பில் சீர்த்திருத்தங்கள் என்பது வேண்டும். இதற்கு நிச்சயம் சிறிது காலம் எடுக்கும்’’ என்றார்.












Click it and Unblock the Notifications