சீனாவில் அதிர்ச்சி! ''ஓடும் காரில் ஜன்னல் வழியாக தலைகுப்புற விழுந்த குழந்தை'' பதைபதைக்கும் காட்சி
பீஜிங்: சீனாவில் ஓடும் காரில் இருந்து ஜன்னல் வழியாக குழந்தை தலைகுப்புற விழுவதை கூட கவனிக்காமல் அந்த காரில் இருப்பவர்கள் செல்லும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
சீனாவின் ஷெய்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்பு நகரம் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். துறைமுகமும் இருப்பதால் எப்போதும் வாகனப் போக்குவரத்து நிறைந்த நகரமாக உள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், சிகனலில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று கிரீன் சிக்னல் விழுந்ததும் மூவ் ஆகி செல்லும் போது காரில் இருந்த சிறு குழந்தை தவறி விழும் காட்சிகள் அங்குள்ள சமூக ஊடகங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

கார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் குழந்தை
போக்குவரத்து சிக்னலில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்கள் முதல் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ காட்சி பதிவில், எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் சர்ரென்று சென்று கொண்டிருக்கின்றன. அப்போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததும் கார்கள் அனைத்தும் வரிசையாய் நிற்கின்றன. அப்போது வெள்ளை நிற காரின் ஜன்னல் வழியாக ஒரு குட்டி குழந்தை எட்டிப்பார்க்கின்றாள். குழந்தையின் தலை மட்டும் காருக்கு வெளியில் தெரிந்தது. பின் இருகையில் இருந்த படி காரில் ஜன்னலுக்கு வெளியே ஆபத்தை அறியாத அந்த சிறுமி வெளியில் உள்ள காட்சிகளை வேடிக்கை பார்க்கும் ஆசையில் தலையை நீட்டியிருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

தலைக்குப்புற விழுந்த குழந்தை
இது நடந்த சில வினாடிகளில் கிரீன் சிக்னல் விழுகிறது. உடனே குழந்தை இருந்த காரின் டிரைவர் காரை, இடதுபுறமாக உள்ள சாலையை நோக்கி திருப்பி செல்கிறார். இதில், குழந்தை சாலையில் அப்படியே தலைக்குப்புற விழுகிறது. குழந்தை விழுந்ததை கவனிக்காமல் அந்த கார் சென்று விடுகிறது. கீழே விழுந்த அதிர்ச்சியில் அங்கும் இங்கும் பார்க்கும் ஏதும் அறியாத அந்த குழந்தை, வலி தாங்க முடியாமல் அழத் தொடங்குகிறது. பின்னால் வந்த சில வாகனங்களில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் வாகனத்தை நிறுத்தி குழந்தையை தூக்கி பத்திரமாக சாலையோரம் எடுத்துச்சென்று ஆசுவாசப்படுத்துகின்றனர்.

போலீசார் விசாரணை
அதிர்ஷ்டவசமாக பெரிய காயம் எதுவும் இன்றி அந்த குழந்தை தப்பியுள்ளது. லேசான காயத்துடன் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. பெற்றோரை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. குழந்தையை இவ்வளவு அஜாக்கிரதையுடனா ? பார்த்துக்கொள்வது என சமூக ஊடகங்களில் பலரும் குழந்தையின் பெற்றோரை விமர்சித்து வருகின்றனர். மேலும் பலர் குழந்தையின் பாதுகாப்பு விஷயத்தில் இவ்வளவு மெத்தனம் காட்டக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

பிரேசில் சம்பவம்
கடந்த மாதம் பிரேசிலில் இதேபோன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி வேகமாக பரவியது நினைவிருக்கலாம். பிரேசிலில் வெளியான அந்த பதைபதைக்க வைக்கும் வீடியோவில், கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பேருந்தின் பின் சக்கரத்திற்குள் இருசக்கர வாகனஓட்டி சிக்கி கொள்கிறார். இதை பார்த்து உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட பேருந்தின் ஓட்டுநர், பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஹெல்மெட் அணிந்து இருந்ததால், அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை. இந்தக் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியிருந்தது. ஹெல்மெட் அணிய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையிலும் இந்த விபத்துக் காட்சிகள் அமைந்து இருந்தது.












Click it and Unblock the Notifications