கேப் விடாமல் அலறும் சைரன்கள்.. மிக பெரிய பதிலடியை ஆரம்பித்த ஈரான்! பதுங்கு குழிகளில் பதுங்கும் இஸ்ரேல் மக்கள்!
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் மோதல் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்ந்து வந்த நிலையில், திடீரென அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இது மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. இதற்குப் பதிலடி தர இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தும் சூழலில், இதனால் இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பு சைரன்கள் தொடர்ச்சியாக அலறி வருகிறது.
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதலில் ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் கீழ் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பல முக்கியமான தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளை ஈரான் இழந்தது.

உச்சக்கட்ட பதற்றம்
இருப்பினும், ஈரான் உடனடியாக இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரானின் தாக்குதல்கள் பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. இதனால் மோதல் முடிவுக்கு வரவே இல்லை.
இந்தச் சூழலில் தான் சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதல் இஸ்ரேல் மருத்துவமனையைத் தாக்கியது. இதில் இஸ்ரேலில் உள்ள அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இது இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருந்தது. ஈரான் தாக்குதல்களை அயர்ன் டோமால் இனி சமாளிக்க முடியாது என்ற பேச்சுகளும் எழ ஆரம்பித்தது.
அமெரிக்கா தாக்குதல்
இது பதற்றத்தை அதிகரித்த சூழலில், திடீரென அமெரிக்கா உள்ளே வந்தது. ஈரான் மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. நிலத்திற்கு அடியில் ஊடுருவிச் சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் பாமை அமெரிக்கா பயன்படுத்தியது.
இது இரு தரப்பிற்கும் இடையே நிலவிய பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது. மேலும், இது ஈரானை ஆத்திரப்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி இருக்கும் என்றும் அதுவும் உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
ஈரான் பதிலடி
இதற்கிடையே இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் இப்போது தொடங்கிவிட்டது போலவே தெரிகிறது. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை ஆரம்பித்ததாகத் தெரிகிறது. ஏவுகணைகள் தாக்க வருவதை உணர்த்தும் வகையில் இஸ்ரேலில் வான் பாதுகாப்பு சைரன்கள் தொடர்ச்சியாக அலறி வருகிறது. ஒரு இடம் என்று இல்லாமல் இஸ்ரேலின் பல இடங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
மக்கள் அச்சம்
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கப் பதுங்கு குழிகளில் பதுங்கும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம், "பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் கட்டளையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நேரத்தில், அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள். பதுங்கு குழிகளை பயன்படுத்துங்கள். அதேநேரம் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்குவதற்கு விமானப்படை செயல்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications