நாடாளுமன்றத்தில் புகுந்த எலி.. அலறிய ஓடிய எம்பிக்கள்.. இது வேற லெவல் அமளிதுமளி!
ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்றத்தில் எலி புகுந்து ஓடியதால் எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேட்ரிட்: ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் எலி ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியதால், கூட்டமே ஒத்தி வைக்கப்பட்ட வேடிக்கை சம்பவம் நடந்துள்ளது.
உறுப்பினர்களின் அமளியால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் செய்தியை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவைக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது குறித்து கேட்டதுண்டா?. அப்படி ஒரு சம்பவம் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சுசானா டயஸ் என்பவரை செனட்டராக நியமிக்க கோரும் முக்கிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினையில் வாக்களிக்க எம்.பி.க்கள் அனைவரும் தயாராகி கொண்டு இருந்தனர்.

ரகளை செய்த எலி
அந்த சமயத்தில் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் திடீரென எலி ஒன்று புகுந்தது. உள்ளே புகுந்த அந்த எலி, சும்மா இருக்காமல், இருக்கையில் அமர்ந்திருந்த எம்.பிக்களின் காலில் ஏறி அங்கும் இங்கும் ஓடியது. இதனால் அவையில் இருந்த உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கூச்சல் குழப்பம்
எலி காலில் ஏறி ஓடியதால் அச்சமடைந்த எம்.பிக்கள் சிலர் கதறியபடி இருக்கையில் இருந்து எழுந்து வெளியே ஓடினர். குறிப்பாக பெண் எம்.பி. ஒருவர் கத்தி கூச்சலிட்டவாறு வெளியே ஓடினார். எலியை பார்த்து அவை தலைவரும் அதிர்ச்சி அடைந்து கத்தினார்.

எலி வேட்டை
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கிருந்த சிலர் அந்த எலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக அந்த எலி பிடிக்கப்பட்டது. அதன் பிறகே மீண்டும் எம்பிக்கள் கட்டடத்திற்குள் வர, கூட்டம் மீண்டும் தொடங்கியது.

வைரல் வீடியோ
வழக்கமாக நாடாளுமன்றத்தில் நடைபெறும் அமளி துமளிகள் அந்நாட்டு செய்தி சேனல்களின் முக்கியமான செய்தி ஆகி விடும். அந்த வகையில், இந்த செய்தியும் ஸ்பெயின் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதோடு அந்த வீடியோ சமூக வலைதளத்திலும் வைரலாகி விட்டது.












Click it and Unblock the Notifications