இந்தியா, சீனா இடையே சிக்கி சிதையமாட்டோம்- நடுநிலை வெளியுறவு கொள்கை- இலங்கை ஜனாதிபதி அனுர உறுதி
கொழும்பு: இந்தியா, சீனா இடையேயான புவிசார் அரசியல் மோதலில் இலங்கை சிக்கி துண்டாடப்படுவதையோ சிதைக்கப்படுவதையோ நாங்கள் விரும்பவில்லை; இலங்கைக்கு என சுதந்திரமான நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைத்தான் விரும்புகிறோம் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க நேற்று பதவியேற்றார். அனுர குமார திசநாயக்கவுக்கு இந்திய பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியான அனுர குமார திசநாயக்க, ஜேவிபி எனும் இடதுசாரி இயக்கத்தின் தலைவர். இதனால் அனுர, சீனா சார்பு நிலையை மேற்கொள்வார்; இந்தியாவுக்கு எதிராக செயல்படுவார் என்கிற யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அனுர குமார திசநாயக்க அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்கிக் கொள்ள இலங்கை விரும்பவில்லை. இலங்கைக்கு என சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை இருக்கிறது. ஆகையால் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து இலங்கை விலகி நிற்கவே விரும்புகிறது.
எனது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல்நாடுகளான சீனா, இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயற்சிக்கும். எந்த ஒரு நாட்டுடனும் இலங்கை தம்மை இணைந்து அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்காது.
இந்தியா- சீனா இடையேயான புவிசார் அரசியல் மோதலில் இலங்கை ஒரு பகுதியாக மாற மாட்டோம். இலங்கை அரசாங்கமானது எந்த தரப்புடனும் இணைந்து கொள்ளாது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிக்கி துண்டாடப்படுவதற்கு இலங்கை விரும்பவும் இல்லை.
சீனாவும் இந்தியாவும் மதிப்பு மிக்க நணபர்கள், எங்கள் அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அவர்கள் நெருங்கிய நட்பு சக்திகளாக மாறுவதை விரும்புகின்றோம்.
ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்றோம் . அதிகரிக்கும் பிராந்திய பதற்றங்களிடையே இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்த நடுநிலை வெளிவிவகார கொள்கை அவசியம்.












Click it and Unblock the Notifications