நவீன தற்கொலை மெஷின்.. உள்ளே படுத்த பெண்.. அடுத்த நொடி ஷாக்.. உடனே பாய்ந்த போலீஸ்.. பரபரப்பு
பெர்ன்: தற்கொலை செய்து கொள்ள உதவும் மெஷினை சுவிட்சர்லாந்து நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. இதற்கிடையே இந்த மெஷினை முதல்முறையாக அமெரிக்கப் பெண் ஒருவர் பயன்படுத்தி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது க்ரிமனல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்கொலை செய்வது என்பது தண்டனைக்குரிய குற்றம். அதற்காக உதவுவதும் குற்றம். நாம் இங்கே தற்கொலைகளைத் தடுக்க அது குறித்த விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து பரப்பி வருகிறோம்.

ஆனால், சில நாடுகளில் தற்கொலை செய்து கொள்வது சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. அதாவது, மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் தற்கொலை செய்து கொள்ளும் உரிமையை அந்த நாடுகள் வழங்குகின்றன. குறிப்பாகப் பல ஐரோப்பிய நாடுகளில் இதற்கான அனுமதி இருக்கிறது.
தற்கொலைக்கு உதவும் மெஷின்: அப்படி தான் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் இதற்கான அனுமதி இருக்கிறது. இந்தச் சூழலில் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள உதவ ஒரு சாதனத்தை வடிவமைத்து இருந்தது. சர்கோ பாட் என்ற இந்த சாதனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், அப்போதே இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
"சர்கோ" என்ற இந்த தற்கொலை செய்து கொள்ளும் மெஷினை வடிவமைத்தவர் ஆஸ்திரேலியா மருத்துவர் பிலிப் நிட்ச்கேயின். இவர் அந்த காலத்திலேயே பலர் தற்கொலை செய்து கொள்ள உதவியிருக்கிறார்.
உள்ளே சென்ற அடுத்த நொடி ஷாக்: இந்தச் சூழலில் சர்கோ பாட் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 64 வயதான அமெரிக்கப் பெண் முதல்முறையாக இதைப் பயன்படுத்தி இருக்கிறார். இது குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இதை அமெரிக்காவைச் சேர்ந்த 64 வயதான பெண் பயன்படுத்தினார். அவர் மிகக் கடுமையான எதிர்ப்பு நோய் குறைபாடு காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்தார்" என்று கூறியிருந்தார். அவர் உள்ளே சென்று படுத்த சில நொடிகளில் அவர் அமைதியாகவும் வேகமாகவும் கண்ணியமான முறையிலும் உயிரிழந்ததாக கூறியிருந்தார்.
தேவையான மருத்துவ மற்றும் மனநல சோதனைகளுக்கு பிறகே அவரை இதைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் தெரிவித்தார். இது சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. தற்கொலை செய்வது என்ன தான் சட்டப்பூர்வமானதாக இருந்தாலும்.. அதை இவ்வளவு ஈஸியாக அணுகும்படி வைத்தால் தற்கொலைகள் அதிகரிக்கும் என்று பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
கைது: இதையடுத்து அந்த தற்கொலை மெஷினை உருவாக்கிய சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து 4 பேரை சுவிட்சர்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலைக்குத் தூண்டுதல், உதவுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மெஷினை பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என ஏற்கனவே எச்சரித்து இருந்ததாகவும் இருப்பினும் அதையும் தாண்டி பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் இந்த கைது குறித்துச் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications