சிரியா ஏர்போர்ட்டில் குண்டுவீசிய இஸ்ரேல்.. ஆதரவு நாடுகளிலும் நீளும் யுத்தம்.. உக்கிரமான போர்
டமாஸ்கஸ்: காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், தற்போது சிரியா தலைநகரில் உள்ள விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக்கொண்டனர்.

பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு நடத்திய சமீபத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் சுமார் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதிக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்கும் இணைப்பை இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கூட மருத்துவமனைக்கு கொண்ட செல்ல காசாவில் உள்ள ஆம்புலன்ஸ்களில் எரிபொருள் இல்லை.
இந்நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் தங்கள் நாட்டின் தலைநகர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது. தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது முதற்கட்ட தகவலாகும். அதேபோல இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. இந்த போக்கு நீடித்தால் இஸ்ரேலுக்கு எதிரான சண்டையை சிரியாவும் தொடங்கும். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே சென்று அரபு நாடுகள்vsஇஸ்ரேல் ஆதரவு நாடுகளுக்கான சண்டையாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. இதற்கு முகாந்திரமாக இன்று காலை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இந்த உரையாடல் சுமார் 45 நிமிடம் வரை நீடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications