சிரியாவில் கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்த விமானப்படை: 82 பேர் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி படையினர் நிறைந்துள்ள பகுதியில் அதிபர் பஷார் ஆதரவு படையினரும் விமானப் படையும் நடத்திய தாக்குதலில் கிட்டதட்ட 82 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சிரியாவில் கிளர்ச்சி படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதியில், அதிபர் ஆதரவு விமானப்படையினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

டமாஸ்கஸ்சில் கிளர்ச்சி படையினர் நடத்திய ராக்கெட் வீச்சில் 10 பேர் கொல்லப்பட்டதற்கு இது பதிலடி ஆகும்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சி நடந்து வருகிறது. இதில், கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் ஆதரவு படையினருக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு சண்டைகளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா புள்ளி விவரம் கூறுகிறது.
அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிற இயக்கங்களில் மதத்தின் பெயரால் அமைந்த படையும் அடங்கும். இந்த படை 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஜாரான் அல்லவுஷ் என்பவர் இருக்கிறார்.
இந்த கிளர்ச்சி படையினர் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்சில் மக்கள் குடியிருந்து வருகிற பகுதிகளை குறிவைத்து நேற்று முன்தினம் ராக்கெட் வீச்சுக்களை நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தர அதிபர் ஆதரவு படையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, அந்த கிளர்ச்சி படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகிற கிழக்கு கூத்தா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் தொடங்கி அதிபர் ஆதரவு விமானப்படையினர் தொடர்ந்து ராக்கெட்டுகளை வீசினர். இதில் 82 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 12 குழந்தைகளும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications