பாகிஸ்தானில் தலிபான் தற்கொலைப்படை தாக்குதல்.. 13 ராணுவ வீரர்கள் பலி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், பொதுமக்கள், உள்ளூர் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு வாகனத்தில் மோதி தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார். இந்த வெடி விபத்தில் 13 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

தற்கொலைப்படைத் தாக்குதலில் இரண்டு வீடுகளின் மேற்கூறை இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் 6 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் பிரிவின் ஒரு அங்கமான ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழுவின் தற்கொலைப்படை பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திய குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட சுமார் 290 பேர் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தற்போது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பாகிஸ்தானில் எல்லைப் பகுதியில் வன்முறை அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. எங்களுக்கு எதிரான தாக்குதல் நடத்துபவர்களுக்கு, ஆப்கானிஸ்தான் தங்களது நிலத்தில் அனுமதி கொடுத்திருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை தலிபான்கள் மறுக்கின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெறும் என்றும், காரணமானவர்கள் மீது பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications