சிகை கொற்றன்.. எகிப்த் கல்லறைகளில் கண்டறியப்பட்ட தமிழ் எழுத்துக்கள்.. உலக நாடுகளே வியந்து பார்க்குது
கைரோ: எகிப்தின் மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கல்லறையின் நுழைவாயிலில் தமிழ் எழுத்துக்கள் கண்டறியப்பட்டு உள்ளது. பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நிலவிய ஆழமான வணிகத் தொடர்புகளைப் பறைசாற்றும் வகையில், எகிப்தின் புகழ்பெற்ற 'மன்னர்களின் பள்ளத்தாக்கில்' (Valley of the Kings) தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆராய்ச்சியார்கள் மற்றும் அகழ்வாய்வாளர்களால் 'சிகை கொற்றன்' என யுய்ந் தமிழ் பிராமி கல்வெட்டு பெயரிடப்பட்டு உள்ளது. இது, பண்டைய தமிழ்நாடு , இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் ரோமானியப் பேரரசுக்குமான வர்த்தகத் தொடர்புகள் குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஒரு திருப்புமுனைக் கண்டுபிடிப்பாகும்.

பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தின் (EFEO) பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழக பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் ஆகியோர் 2024-2025 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த வியக்கத்தக்க உண்மைகள் வெளிவந்துள்ளன.2024-2025 ஆய்வின்போது, ஆறு கல்லறைகளில் ஏறத்தாழ 30 தமிழ் பிராமி, பிராகிருதம், சமஸ்கிருத கல்வெட்டுகளை அவர்கள் அடையாளம் கண்டு ஆவணப்படுத்தினர். இவை கி.பி. 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை.
மன்னர்களின் பள்ளத்தாக்கை 1926 இல் ஆய்வு செய்து 2,000க்கும் மேற்பட்ட கிரேக்க கிராஃபிட்டிகளை வெளியிட்ட பிரெஞ்சு அறிஞர் ஜூல்ஸ் பெய்லட்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இப்புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் இக்கல்வெட்டுகளை ஆய்வுக்குழு ஆவணப்படுத்தியுள்ளது.
பன்னாட்டுத் தமிழகல்வெட்டியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், இக்கல்வெட்டுகளைப் பொறித்தவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்றும், தென்னகத்தவரே பெரும்பான்மையினர் என்றும் அறிஞர்கள் தெரிவித்தனர். பார்வையாளர்கள் தங்கள் இருப்பைப் பதிவு செய்ய சுவர்களில் பெயர்களைப் பொறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றினர்.
முக்கியக் கண்டுபிடிப்புகள்:
கல்வெட்டுகள்: சுமார் 30 கல்வெட்டுகள் தமிழ் பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
காலம்: இவை கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவை எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இடம்: தீபன் நெக்ரோபோலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
"இந்தக் கல்வெட்டுகளை முதலில் அடையாளம் கண்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. பல ஆண்டுகளாகப் பலர் இந்த இடத்தைப் பார்வையிட்டும், இந்தியத் தொடர்புகள் எதையும் யாரும் கவனிக்கவில்லை," என்று பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.
யார் இந்த 'சிகை கொற்றன்'?
இந்த ஆய்வில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக 'சிகை கொற்றன்' (Cikai Koṟraṉ) என்ற பெயர் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் இந்தப் பெயர் எட்டு முறை செதுக்கப்பட்டுள்ளது.
பெயரின் பொருள்: 'சிகை' என்பது தமிழில் குடுமி அல்லது கிரீடம் என்பதைக் குறிக்கலாம். 'கொற்றன்' என்பது தூய தமிழ் சொல்லாகும்.
தமிழ் தொடர்பு: 'கொற்றம்' என்றால் வெற்றி என்று பொருள். சங்க இலக்கியமான புறநானூற்றில் புகழப்படும் பிட்டாங்கொற்றன் என்ற சேர மன்னரின் பெயரிலும் 'கொற்றன்' என்ற சொல் பயின்று வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மற்ற பெயர்கள்: 'கோபான் வரத கண்டன்', 'சாத்தன்', மற்றும் 'கீரன்' போன்ற தமிழ் பெயர்களும் அங்குள்ள சுவர்களில் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 'கோபான்' என்ற பெயர் தமிழகத்தின் அம்மன்கோவில்பட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று முக்கியத்துவம்:
தமிழகத் தொல்லியல் துறை ஆராய்ச்சியார்கள் இது குறித்துக் கூறுகையில்:
"இந்தக் கண்டுபிடிப்புகள் மலபார் கடற்கரை வழி பண்டைய தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசுக்கும் இருந்த வணிகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. இதுவரை எகிப்தின் துறைமுக நகரமான பெரெனிகேவிலேயே அதிக ஆய்வுகள் நடந்தன. இப்போது நைல் நதிப் பள்ளத்தாக்கு வரை தமிழர்களின் தடம் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது."
இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்து சென்ற வணிகர்கள் அல்லது பயணிகள், அங்குள்ள கல்லறைகளைப் பார்வையிட்டபோது, அப்போதைய வழக்கப்படி தங்கள் பெயர்களைச் சுவர்களில் செதுக்கிச் சென்றுள்ளனர். இது தமிழர்கள் அக்காலத்திலேயே கடல் கடந்து எவ்வளவு தூரம் பயணித்துள்ளனர் என்பதற்கு ஒரு வலுவான சான்றாகும்.
குறிப்பாக, 'சிகை கொற்றன்' என்ற பெயர் ஐந்து கல்லறைகளில் எட்டு முறை பொறிக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் மற்றும் உயரமான உட்புறச் சுவர்களிலும் இது காணப்படுகிறது. ஒரு கல்லறையில், நுழைவாயிலின் சுமார் நான்கு மீட்டர் உயரத்தில் இது இருப்பதை பேராசிரியர் ஸ்ட்ராச் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications