சிரியாவில் வெடித்த போர்.. ஈரானுக்கு வந்த பெரிய சிக்கல்.. முடங்கப்போகும் ஹெஸ்புல்லா? இஸ்ரேல் ஹேப்பி
டமாஸ்கஸ்: ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - லெபனான் மோதலை தொடர்ந்து தற்போது சிரியாவில் போர் வெடித்துள்ளது. சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் மோதி வருவதோடு அந்த நாட்டின் 2வது பெரிய நகராக உள்ள அலெப்போவை கைப்பற்றி உள்ளனர். சிரியாவில் இந்த உள்நாட்டு போர் வெடித்துள்ளதால் ஈரானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, லெபனானில் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்பு மொத்தமாக முடங்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் ஒன்று சிரியா. இந்த நாடு உள்நாட்டு போருக்கு மிகவும் பெயர் பெற்றது. இந்த நாட்டில் அதிகளவில் சன்னி இஸ்லாமியர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் உள்ளனர்.

இந்த சிரியா நாட்டின் அதிபராக இருப்பவர் பஷர் அல் அசாத். இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். இவர் யார் என்றால் அலவைட் (Alawite) பிரிவை சேர்ந்தனர். இதுவும் ஷியா இஸ்லாமியரை தான் குறிக்கும்.
சிரியாவில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் இருந்தாலும் கூட ஆட்சி அதிகாரம் என்பது ஷியா பிரிவை சேர்ந்த பஷர் அல் அசாத் வசம் தான் உள்ளது. இது ஒருபுறம் இருக்க சிரியாவில் கடந்த 2011ல் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் திரண்டு அலெப்போ நகரை கைப்பற்றினர். அதன்பிறகு ஈரான், ரஷ்யா உதவியுடன் 2016ல் அந்த நகரை அதிபர் பஷர் அல் அசாத் கைப்பற்றினார். அதன்பிறகு அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் தான் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிரியாவின் அலெப்போவில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பின் தலைமையில் போராட்டக்காரர்கள் அந்த நகரை கைப்பற்றி உள்ளனர். தற்போது அலெப்போ நகரில் அதிபர் பஷர் அல் அசாத் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தான் சிரியாவில் வெடித்துள்ள உள்நாட்டு போர் என்பது ஈரானுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிரியாவுக்கும், ஈரானுக்கும் காலம் காலமாக தொடர்ந்து நல்ல உறவு உள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் சிரியா உள்நாட்டு போரின் போது சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ரஷ்யாவுடன் சேர்ந்து ஈரானும் உதவியது. போராட்டக்காரர்களிடம் இருந்து அலெப்போ நகரை மீட்டு அதிபர் பஷர் அல் அசாத்திடம் ஒப்படைத்ததற்கு ஈரானும் மிகவும் முக்கிய காரணம்.
இப்போது மீண்டும் உள்நாட்டு போர் வெடித்து இருப்பது ஈரானுக்கு தலைவலியை கொடுத்துள்ளது. அதாவது ஈரான் ஆதரவு அமைப்புகள் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் தான் ஈரான், இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆயுதங்களை ஈரான் தான் வழங்கி வருகிறது.
இந்த ஹெஸ்புல்லாக்களுக்கு செல்லும் ஆயுதங்களை சிரியா வழியாக தான் ஈரான் அனுப்பி வைக்கும். தற்போது உள்நாட்டு போர் நடவடிக்கையால் ஹெஸ்புல்லாக்களுக்கான ஆயுத சப்ளையில் பாதிப்பு ஏற்படலாம். அப்படி இருக்கும்போது காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலை ஹெஸ்புல்லாவால் திறம்பட எதிர்க்க முடியாது. இதனால் ஈரானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போரை இஸ்ரேல் உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications