'ஹலோ நாங்க மீட்பு படையிலிருந்து பேசுறோம்..' துருக்கி துயரத்தை பயன்படுத்தி நூதன மோசடி! 48 பேர் கைது
தாங்கள் மீட்பு படையினர் என்று கூறி தங்களுக்கு பணம் தேவைப்படுவதாக மோசடியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அங்காரா: துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி அதிகாலையில் திடீரென கட்டிடங்கள் குலுங்கி சரிந்துள்ளன. என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்வதற்கு முன்னரே பலர் உயிரிழந்தனர். பொழுது புலர்ந்த பிறகுதான் இது நிலநடுக்கம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் மீட்க முயன்றனர். அதேபோல அரசும் தனது மீட்புப் படைகளை நாட்டின் தென்கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கடும் பனி காரணமாக தலைநகரிலிருந்து தென்கிழக்கு பகுதிகளுக்கான விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனால் மீட்புப்படையினரால் உடனயாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் வானிலை சீரானதற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை துரிதமாக மீட்கத் தொடங்கினர். ஆனால் எதிர்பார்த்ததைவிட பாதிப்பு அதிகமாக இருந்ததால் மீட்பு படையினரின் எண்ணிக்கை போதவில்லை. இப்படி இருக்ககையில் நிலநடுக்கம் பதிவான நான்கு மணி நேரம் கழித்து உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்தன.

உதவி
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைத்தன. இதனையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. முதலில் 40-100 சடலங்கள் வரை கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேரம் போக போக சடலங்களின் எண்ணிக்கையும் அதிகமானது. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு சடலம் இடிபாடுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. கட்டிட குவியலுக்குள் இனி உயிர் பிழைத்தோர் யாரும் இருக்க மாட்டார்கள் என்நு நினைக்கையில் சிலர் மட்டும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதும் மிகவும் சவாலாக இருந்துள்ளது.

மின்வெட்டு
ஏனெனில் நிலநடுக்கம் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல சாலைகளும், தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் தேவையான மருந்துகள் கிடைப்பதில் பெரும் சிரமம் நீடித்தது. மறுபுறம் எந்த காயங்களும் இன்றி உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்து சாலையில் கடும் பனியில் நிராதரவான நிலையில் நின்றுக்கொண்டிருந்தனர். இப்படி இருக்கையில்தான் நேச நாடுகள் அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் சரியான நேரத்திற்கு துருக்கி மக்களுக்கு வந்து சேர்ந்தன. உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள மைதானங்களில் தற்காலிக குடில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் நிலநடுக்கம்
மீட்பு பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அன்று மாலை மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதேபோல 5 முறை தொடர்ந்து லேசான நில அதிர்வு பதிவானது. இதனால் மீட்பு பணிகளில் அவ்வப்போது தோல்வி ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை சுமார் 26 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் லேசான நில அடுக்குகளை கொண்ட பகுதிகளில் துருக்கியும் ஒன்று. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக பாதிப்புகளை உருவாக்கிவிடும். ஏற்கெனவே கடந்த 1999ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் சுமார் 19 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

உயிரிழப்பு
அதற்கு முன்னர் 1939ம் ஆண்டு நிலநடுக்கத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோல் உயிரிழந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆன நிலையிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்த ஒருவாரக்காலத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருடன் இருந்தவர்கள் பலரும் காயங்களுன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். கட்டிட குவியல்களிலும், ஆளற்ற கட்டிடங்களிலும் பல விலை மதிக்க முடியாக பொருட்களை இவர்கள் திருடி சென்றுள்ளனர். அதேபோல தங்களை மீட்புக்குழுவினரை போல காட்டிக்கொண்டு பண உதவி வேண்டும் என்று கூறி மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை
இவ்வாறு சுமார் 46 கொள்ளை சம்பவங்களிலும், 2 பேர் மோசாடி குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளனர். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு துருக்கியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத காலத்திற்கு அவரச நிலை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பகுதியில்தான் கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இது குறித்து அந்நாட்டு அதிபர் எர்டோகன், "கொள்ளையர் உறுதியாக ஒழிக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications