மாலியில் உள்ள ஐ.நா.முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி: 4 பேர் படுகாயம்
மாலி: ஐக்கிய நாடுகள் முகாம் மீது ராக்கெட் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியானதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஆலிவர் சல்காடோ தெரிவித்துள்ளார்.
மாலியின், வடக்கு கைடல் பகுதியில் உள்ள ஐநா அமைதி காப்பாளர்கள் முகாம் மீது சனிக்கிழமையன்று ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 அமைதி காப்பாளர்களும் ஒரு ஒப்பந்ததாரரும் பலியாகினர். மேலும், காயமடைந்த 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆலிவர் சல்காடோ தெரிவித்தார்.

கடந்த வாரம் மாலி தலைநகர் பமாகோவில் உள்ள ரேடியன் புளூ நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கு தங்கியிருந்த ஓட்டல் ஊழியர்கள் உட்பட 170 பேரை அவர்கள் சிறைபிடித்தனர். அந்த ஓட்டலில் 20 இந்தியர்களும் தங்கியிருந்தனர். அவர்களை மாலி அதிரடிப் படை வீரர்களும் ஐ.நா. அமைதிப் படை வீரர்களும் பத்திரமாக மீட்டனர்.
சுமார் 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப் பட்டனர். அப்போது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 27 பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து மாலியில் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 27 பேருக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன், சீன அரசு உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications