துபாய்க்கு வேலை தேடி சென்ற கும்பகோணத்துக்காரர் மருத்துவமனையில் அனுமதி
துபாய்: துபாய்க்கு வேலை தேடி வந்த கும்பகோணத்தைச் சேர்ந்தவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கழிப்பறையில் விழுந்து கிடந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காளியப்பா நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (47). அவர் துபாயில் உள்ள டயர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி சொந்த ஊருக்கு சென்றார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது.
பொருளாதாரத் தேவையின் காரணமாக அவர் மீண்டும் துபாய்க்கு வேலைக்கு வர முயற்சி செய்தார். பல நிறுவனங்களுக்கும் விண்ணப்பம் அனுப்பியும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் உதவியுடன் 3 மாத விசிட் விசாவில் துபாய்க்கு டிசம்பர் 17ம் தேதி வந்தார்.
துபாய் ரசிதியா பகுதியில் உள்ள நண்பர்களின் அறையில் தங்கி வேலை தேடி வந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் அதற்கான மருந்துகளை கொண்டு வந்து சாப்பிட்டும் வந்தார். கடந்த வாரம் காலை வேளையில் கழிப்பறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. அறையில் தங்கியிருக்கும் மற்ற நண்பர்கள் வேலைக்குச் செல்ல தயாராவதற்கு காத்திருந்தனர்.
சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு அவர் மயக்கமடைந்து கிடந்தார். உடனே அந்த அறையைச் சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸ் கழிப்பறை கதவை உடைத்து மயக்கமடைந்து கிடந்த குருமூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துபாய் ராஷித் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் ரத்த அழுத்தம் அதிகமாகி அவரது மண்டையில் உள்ள ரத்தக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தலை முழுவதும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசிக்க மெஷின் உதவி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் உணவு உட்கொள்ள, சுவாசிக்க தொண்டையில் ஒரு சிறிய துளை போடப்பட்டுள்ளது.
அவரது உடல் நிலை சீராக 10 நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். விசிட் விசாவில் வந்து வேலை தேடி வரும் அவரது மருத்துவ செலவு ரூ. 50,000க்கும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. அவர் வந்த விசாவில் இன்சூரன்ஸ் கவரேஜ் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மருத்துவ கட்டணத்தை செலுத்தி அந்த கட்டணம் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் பெற வேண்டும்.
இதெல்லாம் எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. இதற்கிடையே அவரது குடும்பத்தினர் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் உதவியின் மூலம் குருமூர்த்தியை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளையும் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
எனவே உடல்நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் விசிட் விசாவில் வரும் போது அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள இதுபோன்ற சம்பவங்கள் வலியுறுத்துகின்றன.












Click it and Unblock the Notifications