ஹஜ் பயணிகளுக்காக சவுதியில் 150 லிட்டர் ரத்ததானம்: ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் வழங்கியது
ரியாத்: ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு வருகின்றனர். அவர்களில் உடல்நலக் குறைவானவர்கள், விபத்துகளால் பாதிக்கப்பட்டோரின் உயிரை பாதுகாப்பதற்காக ரியாதில் செயல்பட்டு வரும் தழிம்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆண்டுதோறும் ஹஜ் மாதத்திற்கு முன்னதாகவே ரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது.

இந்த ஆண்டு ஹஜ் பயணிகளில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக 04-10-13 அன்று ரியாத் டி.என்.டிஜே.யால் மாபெரும் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 329 பேரிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. இந்த முகாமில் மத, மொழி பேதமின்றி ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இந்த முகாமில் ரியாத் டி.என்.டி.ஜே. முலமாக சுமார் 150 லிட்டர் ரத்தம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற முகாம்கள் ஹஜ் பயணிகளுக்காக மட்டுமின்றி ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்காக மக்காவுக்கு வரும் பயணிகளில் தேவையுடையோருக்கு உதவுவதற்காகவும் நடத்தப்படுகின்றது என குறிப்பிட்ட ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் அப்துர் ரஹ்மான் நவ்லக், இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற தினங்களிலும் நாங்கள் சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்களை நடத்தி மக்களுக்கு உதவி வருகிறோம் என்றும் அவசர தேவைகளுக்காக எந்நேரமும் ரத்ததானம் செய்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களால் நடத்தப்படும் இந்த மனிதநேயப் பணியால் முகம் தெரியாத உலகின் பல நாட்டவர்களின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன என குறிப்பிட்ட ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது மாஹீன், சவுதி அரேபியாவில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் ரியாத் டி.என்.டி.ஜே. நடத்தும் 25வது ரத்ததான முகாம் இது என்றும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications