அடுத்தடுத்து ஏற்பட்ட 9 நில அதிர்வுகள்! தரைமட்டமான ஆப்கானிஸ்தான்! உச்சத்தில் உயிரிழப்பு! என்ன நடந்தது
கபூல்: ஆப்கன் நாட்டில் நேற்று மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சமீப காலங்களில் உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. வலிமையான நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவதால் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கிறது.

புயல், வெள்ளம் போன்ற மற்ற பேரிடர்களைப் போல இல்லாமல் நிலநடுக்கம் எங்கே.. எப்போது ஏற்படும் என்பதை நம்மால் கணிக்கவே முடியாது. நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகே அதைத் தெரிந்து கொள்ள முடியும். இதனால் பொதுமக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாது.
உயிரிழப்புகள் அதிகரிப்பு: இதற்கிடையே நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானைத் தாக்கிய இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவானது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. 2053 பேர் இதில் உயிரிழந்துள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கனின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெராட்டில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். முதலில் ரிக்டரில் 6.3ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து எட்டு நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பலர் படுகாயம்: இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்த 1,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் எனப் பலரும் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்குச் சிகிச்சை தரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று அப்பகன் நேரப்படி காலை 11 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சில நிமிட இடத்தில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது. அங்கே சமீப காலங்களில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அங்குள்ள பல கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படாத நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்க அதுவே காரணம் எனச் சொல்லப்படுகிறது.
சாலைகளில் தஞ்சம்: நிலநடுக்கத்திற்குப் பின் ஏற்பட்ட நில அதிர்வுகள் பல மணி நேரத்திற்குத் தொடர்ந்ததால், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் சாலையிலேயே தங்க வேண்டி இருந்தது.
ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இந்து குஷ் மலைத்தொடரில் ஆப்கன் யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பிற்கு அருகில் இருப்பதே இதற்குக் காரணமாகும். அங்கே கடந்த ஆண்டு ஜூன் மாதம், 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். அதேபோல இந்த ஆண்டு மார்ச் மாதம், வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜூர்ம் அருகே ஏற்பட்ட 6.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் சிலர் கொல்லப்பட்டனர்.
ஆப்கனை பொறுத்தவரை அங்கே நிலைமை நல்ல நிலையில் இல்லை. ஏற்கனவே கடந்த 2021இல் அங்கு இருந்த மக்கள் ஆட்சி தூக்கி எறியப்பட்டு அதற்குப் பதிலாக தலிபான்கள் அதிகாரத்திற்குத் திரும்பினர்.. அப்போது முதலே பல வெளிநாடுகள் தங்கள் உதவிகளைத் திரும்பப் பெற்ற நிலையில், ஆப்கானிஸ்தான் மோசமான நிலையில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications