ஹார்வர்ட் பல்கலையில்.. வெளிநாட்டு மாணவர்களுக்கு 'நோ' அட்மிஷன்! டிரம்ப்பால் இந்தியர்களுக்கு சிக்கல்
வாஷிங்டன்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள், டிரம்ப் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்து. எனவே வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கல்வி பயில தடை விதித்தார். ஆனால் இந்த தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்நிலையில் புதியதாக எந்த மாணவரும் சேரக்கூடாது என்று தற்போது மற்றொரு தடையை டிரம்ப் போட்டிருக்கிறார். இதனால் இந்திய மாணவர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
நேற்று இரண்டு முக்கியமான உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார். ஒன்று வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிப்பது. அதன்படி 12 நாடுகளை சேர்ந்தவர்கள் இனி அமெரிக்காவில் நுழைய முடியாது. அதேபோல 7 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு அதிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இனி புதியதாக எந்த வெளிநாட்டு மாணவர்களும் சேர்ந்து கல்வி பயில கூடாது என்கிற உத்தரவிலும் அவர் கையெழுத்து போட்டிருக்கிறார்.

"அதிபர் டிரம்ப், நம்முடைய கல்வி நிலையங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அவர்கள் அமெரிக்காவை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும்" என்று டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு பிறகு, வெள்ளை மாளிகை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதேபோல டிரம்ப் கூறுகையில், "ஹார்வர்டில் கல்வி பயில்வதற்காக மட்டும் அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே ஹார்வர்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களை வேறு கல்வி நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், ஹார்வர்டில் எந்த வெளிநாட்டு மாணவரும் கல்வி பயில கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தடையை விதித்திருந்தது.
இப்படி பல்ப் வாங்கிய டிரம்ப், இதை சமாளிக்க தற்போது புதிய தடையை போட்டிருக்கிறார். இன்றைய தேதியில் ஹார்வர்ட் பல்கலையில் சுமார் 788 இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் சிலர் கல்வி உதவித்தொகை பெற்று படிக்கின்றனர். இருப்பினும் இந்த மாணவர்கள் மொத்தமாக ஆண்டுக்கு ரூ.175 கோடி கட்டணமாக செலுத்துகின்றனர். இதை அமெரிக்க மாணவர்களின் கல்விக்காக ஹார்வர்ட் செலவு செய்கிறது.
2025-2026ம் கல்வியாண்டில் இன்னும் அதிகமான இந்திய மாணவர்கள் ஹார்வர்டில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் டிரம்பின் தடை இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?:
இந்த தடைக்கான காரணம் இஸ்ரேல் எதிர்ப்பு மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்தான். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போருக்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது. ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். சர்வதேச அளவில் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு சப்போர்ட் செய்தாலும், சொந்த பல்கலைக்கழக மாணவர்கள் அதை எதிர்க்கிறார்களே என்று அமெரிக்கா மீது விமர்சனங்கள் எழுந்தன.
இதை கவுரவ பிரச்சனையாக அமெரிக்கா எடுத்துக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட, தலைமை தாங்கிய மாணவர்களை நாடு கடத்தியது. மட்டுமல்லாது இதுபோன்ற மாணவர்களை பல்கலையில் சேர்க்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை பல்கலை நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை. எனவேதான் அடுத்தடுத்து பல அதிரடியான உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications