அழிவின் உச்சம்.. அச்சத்தில் மக்கள்! துருக்கியில் 4ஆவது சக்திவாய்ந்த நிலநடுக்கம்! எங்கும் சடலங்கள்
துருக்கி: துருக்கி நாட்டில் நேற்றே மூன்று முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில் நேற்று முதலில் காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகியிருந்தது.
பொதுமக்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை..

மோசமான பாதிப்பு
இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்றே இதை ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. அப்போது அங்குத் துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவாகி இருந்தது.

4ஆவது நிலநடுக்கம்
அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரிக்டர் அளவுகோலில் 6ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்படி நேற்று மட்டும் 24 மணி நேரத்திற்கு மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதற்கிடையே இப்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5ஆகப் பதிவாகியுள்ளது. ஏற்கனவே, நிலநடுக்கத்தால் கட்டடங்கள் மோசமாக உள்ள நிலையில், அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் மேலும் பாதிப்புகளை மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

எங்கு ஏற்பட்டது
அங்குள்ள அங்காரா மாகாணத்தின் மத்திய அனடோலியா பகுதியில் அமைந்துள்ள துருக்கியின் கோல்பாசி நகரில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் பதிவான நிலநடுக்கத்திற்குப் பின், ரிக்டரில் 4க்கு மேலான 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் (aftershocks) பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு நாட்கள் அதிகமாக அதிகமாக இந்த பிந்தைய நில அதிர்வுகளின் எண்ணிக்கையும் வலிமையும் தொடர்ந்து குறைந்தே வரும்.

நில அதிர்வுகள்
இருப்பினும், இன்னுமே கூட ரிக்டரில் 6 வரை கூட இந்த பிந்தைய நில அதிர்வுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. ஏற்கவே, நிலநடுக்கத்தால் அங்குள்ள பல கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன. அவர்களை மீட்க மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் அங்கு இப்படி தொடர்ச்சியாக ஏற்படும் நில அதிர்வுகள் வலிமையற்று இருக்கும் கட்டிடங்களை முழுமையாக நாசப்படுத்தும். இதுவரை 5000க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு
இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியின் பெரும் பகுதி நிலநடுக்கம் ஏற்பட ஆபத்தான பகுதியில் இருந்தாலும் கூட, அங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் எந்தவொரு முறையான பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றிக் கட்டப்பட்டதில்லை. உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே, பாதிப்புகள் எந்தளவு சேதம் எந்தளவுக்கு என்பது குறித்த தகவல்கள் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications