வங்கி கணக்கில் விழுந்த ரூ.7000 லட்சம் கோடி! தலையே சுத்திடுச்சு! ஆனா அடுத்து நடந்த பயங்கர ட்விஸ்ட்
பிரேசிலியா: திடீரென உங்கள் வங்கிக் கணக்கில் 7000 லட்சம் கோடி ரூபாய் வந்து விழுந்தால் என்ன செய்வீர்கள்.. எது 7000 லட்சம் கோடியாக கேட்கும் போதே அதிர்ச்சியாக உள்ளது தானே.. ஆனால், இங்கே ஒருவரது வங்கிக் கணக்குக்கு இப்படி தான் 7000 லட்சம் கோடி விழுந்துள்ளது. என்ன நடந்தது.. வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை வர என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
வங்கி ஊழியர்கள் செய்யும் சிறு பிழைகள் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நம்ம ஊரிலேயே வங்கிக் கணக்குகளில் பல முறை கூடுதல் தொகை வரவு வைக்கப்பட்ட சம்பவங்களை நாம் பார்த்து இருப்போம்.

7000 லட்சம் கோடி ரூபாய்
அதுபோல ஒரு சம்பவம் தான் சர்வதேச வங்கியான சிட்டி வங்கியில் நடந்துள்ளது. அங்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு 280 டாலர் வரவு வைப்பதற்குப் பதிலாக ஊழியர் கூடுதல் தொகையை வரவு வைத்துவிட்டார். கூடுதல் தொகைனா எவ்வளவு எனக் கேட்கிறீர்களா.. $81 டிரில்லியனை மாற்றி அனுப்பிவிட்டார்கள். $81 டிரில்லியன் என்றால் இந்திய மதிப்பில் ரூ.7000 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இந்த மாபெரும் பிழை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இருப்பினும், ஊழியர் இந்த தொகையை மாற்றி அனுப்பிய 90 நிமிடங்களில் இந்தச் சம்பவம் குறித்து வங்கி கண்டுபிடித்துவிட்டதாம்.. வங்கி நெட்வொர்க்கில் இருந்து பணம் வெளியேறும் முன்பு, அதாவது அந்த நபர் பணத்தை எடுக்கும் முன்பே இந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டுச் சரி செய்யப்பட்டதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஊழியர்கள் கண்ணில் படவில்லையாம்
இரண்டு ஊழியர்கள் அந்த பரிவர்த்தனையை செக் செய்துள்ளனர். இருவரும் மிஸ்டேக்கை கண்டுபிடிக்காமல் அங்கீகரித்துவிட்டனர். அதன் பிறகு சுமார் 1.30 மணி நேரத்திற்குப் பிறகு மூன்றாவது ஊழியர் செக் செய்யும் போதே இந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறகு இந்த பிழை குறித்த அவர்களே ஃபெடரல் ரிசர்வ் மற்றும் நாணயக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படியொரு பிழை நடந்தது உண்மை தான் என்பதைச் சிட்டி குழுமத்தின் செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். இருப்பினும், விரைவாக அந்த பிழை கண்டறியப்பட்டுச் சரி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதல்முறை இல்லை
அதேநேரம் சிட்டி குரூப் வங்கியில் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பும் கூட பல முறை சிட்டி குருப்பில் இதுபோன்ற பிழைகள் நடந்துள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டில், தவறுதலாக $900 மில்லியனை அந்த வங்கி அனுப்பியிருந்தது. அப்போது அது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், சிட்டி வங்கிக்குப் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்தே விலகும் சூழலும் ஏற்பட்டது.
தொடர்ந்து 2021இல் சிட்டி வங்கியின் சிஇஓவாக பதவியேற்ற ஜேன் ஃப்ரேசர் வங்கியின் நெட்வொர்க்கை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், இதுபோன்ற பிரச்சினைகள் நடப்பது தொடர்கதையாகவே உள்ளது. இதற்காகக் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் சிட்டி குரூப் $136 மில்லியன் அபராதம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தவறு எப்படி நடந்தது?
இன்புட் தவறும் காலாவதியான பேக்அப் அமைப்புமே இந்த சிக்கலுக்குக் காரணம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். கடந்த மார்ச் மாதம் பிரேசிலில் உள்ள வாடிக்கையாளர் கணக்கிற்கு 280 டாலர் மதிப்பிலான பரிவர்த்தனையில் பிழை ஏற்பட்டுள்ளது. ஆட்டோமெடிக்காக பரிவர்த்தனை கிளியர் ஆவதில் சிக்கல் எழுந்ததால் மெனுவலாக தொகையை கிரெடிட் செய்யத் தொழில்நுட்ப குழு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி ஊழியர் ஒருவர் அந்த பரிவர்த்தனையை ஓபன் செய்து இருக்கிறார். அதில் டிஃபால்ட்டாக 15 பூஜ்ஜியங்கள் இருந்துள்ளன. பரிவர்த்தனை தகவல்களைப் பதிவிட்ட அந்த ஊழியர் கூடுதல் பூஜ்ஜியங்களை நீக்க மறந்துவிட்டார். இதுவே பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் சிட்டி குரூப்பில் இதுபோல 10 பரிவர்த்தனைகளில் பிழை ஏற்பட்டுள்ளது. இது 2022ல் நடந்த 13 பிழைகளை விடக் குறைவு என்றாலும் நிலைமை மோசமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications