டெல்லியை அடுத்து தாய்லாந்திலும் உபேர் டாக்சிக்கு தடை
பேங்காக்: டெல்லியை அடுத்து தாய்லாந்திலும் அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லியில் அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் டாக்சிக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் உபேர் டாக்சிக்கு தாய்லாந்து அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு தரை போக்குவரத்து துறை டைரக்டர் ஜெனரல் திரபோங் ரோட்ப்ரசர்ட் கூறுகையில்,

உபேர் நிறுவனம் தங்கள் சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்நிறுவன கார்கள் விமான நிலைய லிமோசின்கள் போன்று பச்சை நிற நம்பர் பிளேட்டுடன் ஓடுகின்றன. உபேர் டாக்சி டிரைவர்கள் அங்கீகரிக்கப்பட்டதை விட சட்டவிரோதமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். டிரைவர்கள் உரிமம் இன்றியும், பொது வாகனங்கள் ஓட்டும் டிரைவர்களின் டேட்டாபேஸில் தங்கள் பெயர்களை பதிவு செய்யாமலும் உள்ளனர் என்றார்.
தாய்லாந்தில் உபேர் டாக்சியை ஆன்லைனில் தான் புக் செய்ய முடியும், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறைக்கு தாய்லாந்து அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உபேரின் வரி செலுத்தும் முறை பற்றி இந்தோனேசியா கேள்வி எழுப்பியுள்ளது. உபேர், கிராப் டாக்சி உள்ளிட்டவை செயல்பட சிங்கப்பூரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications