கோதாவரி.. "ஓட்டை"ப் போட்டு நாட்டைப் பிரி...!
லண்டன்: ஐரோப்பிய யூனியனில் நீடிக்க வேண்டுமா அல்லது விலக வேண்டுமா.. பிரிட்டனை கலக்கி வரும் பரபரப்பு கேள்வி இது. இந்தக் கேள்விக்கு ஜூன் 23ம் தேதி விடை தரப் போகிறார்கள் பிரிட்டிஷ் மக்கள். அன்றுதான், யூனியனில் நீடிக்க வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
பிரிட்டன் பிரிய வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் கூற ஆரம்பித்துள்ளன. எனவே ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் பிரிவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஐரோப்பிய யூனியனை பிரிட்டிஷ் மக்கள் பெரும்பாலானோர் வெறுக்கின்றனர். அதனால் நமக்கு நல்லது நடந்ததை விட பாதகமே அதிகம் என்பது அவர்களது எண்ணம். பிரிந்து விடுவதுதான் பிரிட்டனுக்கு நல்லது என்ற எண்ணம் மேலோங்கவே இதோ வாக்கெடுப்புக்கு தயாராகி விட்டது இங்கிலாந்து.

ஜூன் 23
ஜூன் 23ம் தேதி இந்த பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதில் ஒரே ஒரு கேள்விதான் - ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிய வேண்டுமா அல்லது இணைந்திருக்க வேண்டுமா. 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெறும் விடை வெற்றி பெற்றதாக கருதப்படும்.

கேமரூன் அளித்த வாக்குறுதி
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். ஆனால் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருப்பதே நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது என்று பிரிட்டனை ஆண்டு வந்த தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூனும் கூட இதையேதான் கூறி வந்தார். ஆனால் கடந்த 2015ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், அவர் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவேன் என்று திடீரென வாக்குறுதி அளித்தார். அதை தற்போது நிறைவேற்றுகிறார்.

28 நாடுகளின் கூட்டமைப்பு
ஐரோப்பிய யூனியன் என்பது 28 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பாகும். உலக அளவில் உள்ள வலுவான பொருளாதார, அரசியல் சக்திகளில் ஒன்றாக ஐரோப்பிய யூனியன் திகழ்கிறது. 2ம் உலகப் போர் முடிந்த பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்தன. இந்த ஒற்றுமையானது நாளுக்கு நாள் வலுவடைந்து இன்று கிட்டத்தட்ட ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்று நினைக்கும் அளவுக்கு இந்த பிணைப்பு வலுப்பட்டு நிற்கிறது.

சுதந்திர வர்த்தகம்
ஐரோப்பிய யூனியன் நாடுகள், தங்களுக்குள் சுதந்திரமாக வர்த்தகம் செய்து கொள்ளலாம். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு எளிதாக போய் வரலாம். பாஸ்போர்ட் தேவையில்லை. அனைவருக்கும் பொதுவான வர்த்தக சந்தை, கரன்சி உள்ளது. யூரோ நாணயத்தை 19 நாடுகள் தற்போது தங்களது ஒரே நாணயமாக பயன்படுத்தி வருகின்றன. தனியாக நாடாளுமன்றம் உள்ளது.

எல்லாம் இருந்தும் நோ பீஸ் ஆப் மைன்ட்!
ஆனால் இப்படி எல்லா சவுகரியமும் இருந்தும் கூட இங்கிலாந்து மக்கள் மட்டும் அசவுகரியமாகவே உணர்ந்து வருகின்றனர். காரணம் பல. முக்கியமாக தங்களது பிரைவசி போய் விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். பிற ஐரோப்பிய நாடுகளை விட இங்கிலாந்துக்குத்தான் குறிப்பாக லண்டனுக்குத்தான் பலரும் இடம் பெயர்ந்து வருகின்றனர். இங்குள்ள வளமையை பிற ஐரோப்பிய நாட்டவர் அனுபவிக்கிறார்கள். வேலை வாய்ப்பு, பொருளாதாரம், வசதிகள் உள்ளிட்ட பலவற்றிலும் பிற ஐரோப்பிய நாட்டவரே அதிகம் பலனடைகிறார்கள் என்பது இங்கிலாந்து மக்களின் கருத்தாகும்.

அதிகரிக்கும் பிரச்சினைகள்
தீவிர கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடு பிரிட்டன். ஆனால் அவர்கள் சிரிய முஸ்லீம்களை விரும்பவில்லை. அவர்கள் அகதிகளாக வருவதை விரும்பவில்லை. லண்டனில் பலரும் வந்து குவிவதை விரும்பவில்லை. நாம் உண்டு, நம் நாடுண்டு என்பதே இங்கிலாந்து மக்களின் விருப்பமாக உள்ளது. இதனால்தான் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகி விட அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரிவுக்கு பேராதரவு
இந்த வாக்கெடுப்பில் பிரிவுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று இணையதள கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றனவாம். எனவே ஐரோப்பிய யூனியனை விட்டு இங்கிலாந்து பிரிவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்டியன் -ஐசிஎம் நடத்தி கருத்துக் கணிப்பில் பிரிவுக்கு 52 சதவீதம் பேரும், பிரியக் கூடாது என்பதற்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்சாரம் அது மின்சாரம் படக் கதைதான்!
கிட்டத்தட்ட சம்சாரம் அது மின்சாரம் படக் கதை போலத்தான் இந்த இங்கிலாந்து - ஐரோப்பிய யூனியன் விவகாரமும். அன்பும், பாசமும் இப்போது வில்லங்கமாகி குடும்பம் பிரியும் நிலைக்கு வந்து விட்டது. இது நல்ல முடிவாக அமையுமா என்பதை காலம்தான் உணர்த்த முடியும்.












Click it and Unblock the Notifications