"இனப்படுகொலை செய்கிறது".. ரஷ்யா மீது உக்ரைன் பரபரப்பு புகார்.. சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு
கீவ்: போர் மூலம் ரஷ்யா இனப்படுகொலை செய்வதாகவும், ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை உள்ளது. இதற்கிடையே நேட்டோ பாதுகாப்பில் அமைப்பில் இணை உக்ரைன் முயன்றது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாகும் என அதன் அதிபர் விலாதிமிர் புதின் நினைத்தார். இதனால் நேட்டோவில் உக்ரைனை இணைக்க கூடாது என அவர் கோரி வந்தார். மேலும் அவர் எல்லையில் படையை குவித்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் மீது படையெடுத்துள்ளார்.

அதிகரிக்கும் உயிர் பலிகள்
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக இந்த போர் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இதுவரை 4300 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாகவும், 146 பீரங்கிகள், 27 விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ அமைச்சர் ஹன்னா மலையார் கூறியுள்ளார். இதுதவிர உக்ரைனில் நேற்று வரை ரஷ்யா படைகளால் 3 குழந்தைகள் உள்பட 198 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 33 குழந்தைகள் உள்பட 1,115 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில்...
இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. உக்ரைன் தரப்பில் தொடரப்பட்டுள்ள மனுவில், ‛‛ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் வகையில் உக்ரைனில் இனப்படுகொலை செய்வதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த அவசர உத்தர பிறப்பிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

அதிபர் தகவல்
மேலும் போர் தொடர்பான இழப்புகளும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து உக்ரைன் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அதன் அதிபர் விலாதிமர் ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

உச்சக்கட்டம்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதற்கு பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் உக்ரைன் மீதான போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் தான் உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications