இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது- வாக்கெடுப்பில் இந்தியா ஆப்சென்ட்
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஆனால் இந்தியா உட்பட 14 நாடுகள் இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு உலகத் தமிழர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் 2009-ல் முடிவடைந்தது. அந்த இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர்.
இலங்கை ராணுவம் மிக மோசமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் பலமுறை வலியுறுத்தியது. ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் இலங்கை அரசு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை.

காணாமல் போனோர் கதி என்ன?
மேலும் இலங்கை போரின் போது காணாமல் போனோர் கதி என்ன என்பது தொடர்பாகவும் இலங்கை அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதற்கு நீதி கோரி இலங்கையில் தமிழர் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் பல ஆண்டுகளாக குடும்பம் குடும்பமாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டம்
இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை விசாரித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்தியா நிலைப்பாடு இல்லை
இத்தீர்மானத்துக்கு இதுவரை அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ் என உலகின் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்னொரு பக்கம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் என்பதில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் தீவிரமாக உள்ளன. இதில் இந்தியா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருந்தது. இதனால் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனறு இந்திய அரசுக்கு உலகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை தீர்மானம் இன்று வாக்கெடுப்பு
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உலக நாடுகளின் தீர்மானம் மீது நேற்றும் இன்றும் விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சோதனை முறையிலான வாக்கெடுப்பிலேயே இந்தியா இதில் பங்கேற்கவில்லை என தெரிவித்தது.

தீர்மானம் நிறைவேறியது - இந்தியா ஆப்சென்ட்
பின்னர் விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் 22 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஆனால் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இந்தியாவின் இந்த நிலைப்பாடு உலகத் தமிழர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications