ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கான நிதி உதவியை முடக்க அமெரிக்கா, அரபு நாடுகள் கூட்டு வியூகம்
வாஷிங்டன்: ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கான நிதி உதவியை முடக்குவதற்கு அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் இணைந்து கூட்டாக வியூகம் வகுத்து வருகின்றன.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் உருவானது தான் ஐஎஸ்ஐஎஸ். அந்த நாட்டின் அல் பஸார் ஆட்சிக்கு எதிராக சவுதி உள்ளிட்ட சில நாடுகள் தந்த நிதியுதவி தான் இவர்களை உருவாக்கியது.
சிரியாவில் ரக்கா நகரைப் பிடித்த பின் இவர்கள் கவனம் ஈராக் பக்கம் சென்றது. அங்கு மொசூல் நகரின் ராணுவ கிடங்கை தாக்கி ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா தந்த ஆயுதங்களை கைப்பற்றியனர். இதில் டாங்கிகள்- விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் சிக்கின.

ரூ10 ஆயிரம் கோடி
அத்துடன் மொசூல் நகரில் இருந்த ஈராக்கின் வங்கிகளையும் சூறையாடி பல்லாயிரம் கோடி பணத்தையும் கைப்பற்றிவிட்டனர். சுமார் ரூ. 10,000 கோடி அளவுக்கு பணம் வைத்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை ஐஎஸ்ஐஎஸ் நடத்தி வருகிறது.

ஆயுதக் குவிப்பு
இந்தப் பணம் மூலம் கள்ளச் சந்தையில் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கவும் தொடங்கியுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். ரக்கா நகரிலும் ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட இடங்களிலும் வரி வசூலும் அமோகமாக செய்து வருகிறது இந்த இயக்கம்.

செல்வந்தர்கள் ஆதரவு
இப்போதும் சவுதி உள்ளிட்ட பல சன்னி பிரிவு இஸ்லாமிய நாடுகளின் பெரும் செல்வந்தர்களும் இவர்களுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இவர்களுக்கு பணம் செல்வதை தடுக்காவிட்டால் இவர்களை ஒடுக்குவது சிரமம்.

சவுதி மன்னருடன் ஆலோசனை
இந்த நிலையில்தான் சவுதி மன்னருடன் அமெரிக்கா அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

சவுதியில் முக்கிய ஆலோசனை
அதனைத் தொடர்ந்து சவுதியில் அமெரிக்கா, எகிப்து, ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் 6 அரபு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

நிதி உதவியை ஒடுக்க முடிவு
இந்த ஆலோசனையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்துக்கான நிதி உதவி சென்றடைவதை முடக்குவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் உருவெடுத்திருக்கிறது. இதை ஒடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

ஜான் கெர்ரி தீவிரம்
மேலும் இன்று துருக்கி நாட்டு தலைவர்களுடனும் ஜான் கெர்ரி ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன் பின்னர் அரபு லீக் பொதுச்செயலர் நபில் அல் அர்பியை நாளை ஜான் கெர்ரி சந்தித்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான வியூகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications