வாழு.. வாழ விடு! சீனா-அமெரிக்கா அடாவடி.. இந்தியாவின் எதிர்பார்ப்பு கைகூடும் நேரம் நெருங்கியது
வாஷிங்டன்: சீனா-அமெரிக்கா வர்த்தக போரால் இந்தியா போன்ற மூன்றாம் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிக்கின்றன. இந்நிலையில், பிரச்சனையை பேசி தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றன. அதன்படி ஜெனிவாவில் இரு நாட்டின் உயர் அதிகாரிகளும் 8 மணி நேரம் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கின்றனர். இதில் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்திருக்கிறது.
சீனாவின் துணைப் பிரதமர் ஹே லிஃபெங் மற்றும் அமெரிக்காவின் நிதி செயலர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

பேச்சுவார்த்தை பற்றி டிரம்ப் கூறுகையில், "இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மீண்டும் தொடர்கின்றன. அமெரிக்காவின் வணிகர்களுக்கு சீன மார்க்கெட் திறக்கப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார். இன்றைய தேதியில் இரு நாடுகளும் மாற்றி மாற்றி அதிக அளவில் வரியை விதித்துக்கொண்டிருக்கின்றன. சீனாவுக்கு அமெரிக்கா 145%, அமெரிக்காவுக்கு சீனா 125% என இந்த வரி இருக்கிறது. வரியை இரு நாடுகளும் குறைக்க வேண்டும் என்பது பேச்சு வார்த்தையின் நோக்கம்.
குறிப்பாக அமெரிக்கா 295 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க விரும்புகிறது. அதாவது சீனா அமெரிக்காவில் வர்த்தகம் செய்கிறது. அந்த அளவுக்கு சீனாவில் அமெரிக்காவால் வர்த்தகம் செய்ய முடியவில்லை. இந்த வர்த்தக பற்றாக்குறை 295 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கிறது. இதனை ஈடுகட்ட டிரம்ப் விரும்புகிறார். அமெரிக்கா தன்னை சமமாக நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த வரி விவகாரம் அமெரிக்கா-சீனா என்று இல்லாமல் இந்தியாவையும் பாதித்திருக்கிறது. உதாரணத்திற்கு, வரி காரணமாக உருவான வர்த்தக போர், ரூபாய் மதிப்பை பலவீனப்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்தக்கொண்டு வருகிறது. இது அந்நிய செலாவணியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல சீனாவுக்கு நாம் ஏற்றுமதி செய்து வந்த பருத்தி, மருந்து உள்ளிட்டவை தற்போது ஏற்றுமதியாகாமல் இருக்கின்றன. அல்லது மிக குறைந்த அளவில் ஏற்றுமதியாகின்றன. அங்கிருந்து நமக்கு வர வேண்டிய மின்னணு பொருட்களும் குறைந்திருக்கிறது. எனவே இந்தியாவில் ஸ்மார்ட்போன், ஆட்டோமோபைல் தொழில்கள் பலத்த அடி வாங்கியிருக்கின்றன. இது இந்த துறையில் விலைவாசியை அதிகரித்திருக்கிறது.
மறுபுறம் நமக்கு சில பாசிட்டிவ் விஷயங்களும் நடந்திருக்கின்றன. குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டம் வேகமெடுத்திருக்கிறது. அதேபோல, அமெரிக்காவுடனான உறவும் பலப்பட்டிருக்கிறது. இருப்பினும் உலக பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும்போது இந்தியா எவ்வளவுதான் முயன்றாலும் குறிப்பிட்ட அளவை தாண்டி வளர்ச்சியடைய முடியாது. எனவேதான் சீனா-அமெரிக்கா பஞ்சாயத்து தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
பிரச்சனைகள் தீர்க்கப்படும்பட்சத்தில் புதிய மார்க்கெட்டுகள் ஓபன் ஆகும். அந்நிய முதலீடுகள் தடங்கல் இன்றி உள்ளே வரும். ஆனால் இப்போதைக்கு பஞ்சாயத்துகள் தீர்க்கப்படாது என்று அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications