50% இந்திய மாணவர்களுக்கு விசா ரத்து.. ஜே.டி.வேன்ஸ் வருகையின்போது மத்திய அரசு கேள்வி எழுப்புமா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்கள் பலருக்கு சமீபத்தில் விசா திடீரென ரத்தாகி வருகிறது. விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 50% இந்தியர்களாக இருக்கின்றனர். நாளை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியா வரும் நிலையில் மத்திய அரசு இந்த பிரச்சனை பற்றி பேச வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து பெரும் பிரச்சனையாக வெடித்து கிளம்பியிருக்கிறது. இதனால் வேறு நாட்டை சேர்ந்த மக்களை விட, இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

50% இந்திய மாணவர்கள்
யாருக்கெல்லாம் விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது? எந்த நாட்டை சேர்ந்த மாணவர்கள் இதில் அதிகம்? என்பது பற்றி அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது. 327 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 50% பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. 14% சீனாவை சேர்ந்தவர்கள் என்றும், இதர சதவிகிதத்தினர் தென்கொரியா, நேபாளம், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது.
விசா ரத்துக்கான முக்கிய காரணம்
விசா ரத்துக்கு முக்கிய காரணம் AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் 'Catch and Revoke' தணிக்கை முறைதான் என்று பலரும் கூறுகின்றனர். அதாவது மாணவர்களின் சமூக ஊடக கணக்களை ஆய்வு செய்து, அதில் அமெரிக்க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை யாரேனும் பதிவிட்டிருக்கிறார்களா? அல்லது ஆதரவு தெரிவித்திருக்கிறார்களா? என்பதை அறிந்துக்கொண்டு அதன் அடிப்படையில் விசா ரத்து செய்யப்படுகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு
உதாரணத்திற்கு இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையை எடுத்துக்கொள்வோம். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனால் அமெரிக்க மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பலரும் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தால் அவர்கள் உடனடியாக அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த மாணவர்கள் தங்கள் சோஷியல் மீடியாவில் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்தால் இவர்களுக்கான மாணவர் விசா உடனடியாக ரத்து செய்யப்படும். இதை தானியங்கியாக Catch and Revoke எனும் அமைப்பு செய்கிறது.
டேட்டா பேஸ்
'மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையார் தகவல் அமைப்பு' எனும் டேட்டா பேஸ் இருக்கிறது. இதனை அமெரிக்க உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இயக்கி வருகிறது. இதில் அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவை இருக்கும். இந்த டேட்டா பேஸில் பெயர் இருக்கும் வரை மட்டுமே மாணவர்களால் அமெரிக்காவில் இருக்க முடியும். பெயர் இல்லையெனில் அந்த மாணவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கிறார் என்று அர்த்தம். அவர்கள் நாடு கடத்தப்படலாம்.
பாதிப்பு யாருக்கு அதிகம்?
மேற்குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்பான, 'Catch and Revoke' மாணவர்களின் சோஷியல் மீடியா அக்கவுண்ட்டை கண்காணித்து அவர்களின் பெயரை டேட்டா பேஸிலிருந்து தூக்கிவிடுகிறது. இப்படித்தான் 50% இந்திய மாணவர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு உதவுமா?
பெயர் நீக்கம் தொடர்பாக பல மாணவர்கள் நீதிமன்றங்களை நாடியுள்ளனர். இந்திய அரசு இது தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக நாளை அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ் இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்கிறார். இந்த சமயத்திலாவது மத்திய அரசு தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், அமெரிக்க சட்டங்களையும், அறிவுறுத்தல்களையும் இந்திய மாணவர்கள் கறாராக பின்பற்ற வேண்டும் என இந்தியா அட்வைஸ் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications