உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா & ரஷ்யா ஆலோசனை! ஆனா உக்ரைனுக்கு அழைப்பு இல்லையாம்! ஏன் இந்த முடிவு?
கீவ்: உக்ரைன் போர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடரும் நிலையில், ஒரு வழியாக இப்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்குகிறது. ஆனால், இதில் விஷயம் என்னவென்றால் உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு இல்லையாம். அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் மட்டுமே ஆலோசனை நடத்தவுள்ளனர்.
உக்ரைனில் கடந்த 2022ம் ஆண்டும் வெடித்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. இடையில் சில காலம் தாக்குதல்கள் குறைந்த போதிலும், மீண்டும் தாக்குதல்கள் தொடங்கிவிட்டன.

உக்ரைன் போர்
இந்த போர் உக்ரைன் மக்களை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து சில வினோத தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது உக்ரைன் போர் குறித்து உக்ரைன் அதிபரே இல்லாமல் பேச அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதாவது வரும் நாட்களில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் சவுதி அரேபியாவில் சந்தித்து ஆலோசிப்பார்கள் என்று என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதில் வினோதம் என்னவென்றால் சவுதி அரேபியாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லையாம். இந்தத் தகவலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தான் கூறியிருக்கிறார்.
ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு இல்லை
அதாவது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து உக்ரைன் அதிபரே இல்லாமல் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதற்காக அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளனர். அதேநேரம் ரஷ்யா சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.
அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள்
முன்னதாக நேற்று சனிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக அமெரிக்காவின் பிரதிநிதி மெக்கால் கூறுகையில், "சவுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூன்று நாட்டுத் தலைவர்களும் சந்தித்து ஆலோசிப்பார்கள். அதில் டொனால்ட் ட்ரம்ப், புதின் உடன் நிச்சயம் ஜெலென்ஸ்கியும் பங்கேற்பார். மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் இறுதி சந்திப்பாக இது இருக்கும்" என்றார்.
இது ஒரு பக்கம் இருக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளதாகக் கூறினார். இருப்பினும், எப்போது அவர் செல்கிறார். இந்த பயணத்தில் அவர் அமெரிக்க அல்லது ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.
என்ன நடக்கும்
தற்போது உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா தான் கட்டுப்படுத்துகிறது.. மேலும், கிழக்கில் மெதுவாக முன்னேறி வருகிறது. மறுபுறம் ஆயுதங்கள் மற்றும் வீரர்கள் பற்றாக்குறையால் உக்ரைன் திணறி வருகிறது. இதனால் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட உக்ரைன் தனது பகுதிகளில் சிலவற்றை விட்டுத் தர வேண்டி இருக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications