அடக் கொடுமையே.. படகின் மீது படக்கென்று ஏறிய கப்பல்.. 5 பேர் பலி 100 பேர் மாயம்..வெளியான பகீர் வீடியோ
டாக்கா : வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதிய கோர விபத்தில் 5 பேர் பலியான நிலையில், 100 பேர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் விபத்து நடைபெற்ற போது எடுக்கப்பட்ட பதைபதைப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அப்படகில் பயணித்ததாக கூறப்படுகிறது.

சரக்குக் கப்பல்
திடீரென சுற்றுலாப் படகின்மீது ருபோஷி-9 எனும் சரக்குக் கப்பல் மோதியது. படகில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சிலர் உயிரை காப்பாற்ற தண்ணீரில் குதித்தனர். ஆனால் மிக வேகமாக சரக்குக் கப்பல் வந்ததால் அனைவரும் குதிக்கும் முன்னரே கப்பல் படகை மூழ்கடித்துவிட்டது.

படகு விபத்து
பயணிகள் என்ன செய்வதென்று அலறத் துவங்கும்போது சரக்குக் கப்பலை அதன் கேப்டன் நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் படகை சில மீட்டர்கள் இழுத்துச் சென்று முழுமையாக மூழ்கடித்த பின்னர் தான் கப்பலால் நிற்க முடிந்தது.

5 பேர் பலி
அருகில் சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்த சிலர், இந்த அதிர்ச்சி சம்பவத்தை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். ஒரு ஆண், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 5 பேரின் உடல்களை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். 22 பேர் பத்திரமாக கரைக்கு சேர்ந்துள்ள நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கோர காட்சிகள்
இந்நிலையில் படகு மீது கப்பல் மோதிய போது அருகிலுள்ள மற்றொரு படகிலிருந்த சுற்றுலாப் பயணிகள் இந்த கோர காட்சிகளை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த பதைபதைப்பு வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications