பாகிஸ்தானை குறிவைத்த தாலிபான்கள்.. போரை தொடங்கும் ஆப்கானிஸ்தான்? எல்லையில் ரெடியான 15,000 வீரர்கள்
காபூல்: அண்டை நாடான பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் இருநாடுகளும் ஒன்றையொன்று தாக்கி கொள்ளும் சூழலில் தான் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் திடீரென்று 15,000 படை வீரர்களை குவிப்பதால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இன்னும் 2 மாதங்களில் இந்த போர் 3 வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. அதேபோல் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் நாட்டுடன் ஈரான், லெபனான் நாடுகளும் மோதி வருகின்றன.

இந்நிலையில் தான் தற்போது அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் 15,000 படை வீரர்களை குவித்து வருவது தான் இதற்கு காரணமாகும்.
அதாவது ஆப்கானிஸ்தானில் மக்களாட்சியை கவிழ்த்து தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்களை உலக நாடுகள் யாரும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் முதல் முதலாக பாகிஸ்தான் தான் ஆதரவு தெரிவித்து அங்கீகரித்தது. இப்படி நட்பாக இருந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இருநாடுகள் இடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது.
எல்லை தாண்டி ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலை டிடிபி எனும் தெஹ்ரீக் ஐ தாலிபான் எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் நோக்கம் என்பது பாகிஸ்தானிலும் தாலிபான்களின் ஆட்சியை நிறுவுவது தான். இதனால் தான் அடிக்கடி டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதார்கள்.அந்த வகையில் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர்.
இதனால் டிடிபி அமைப்பு மீ பாகிஸ்தான் கடும் கோபமடைந்தது. இதையடுத்து டிசம்பர் 24ம் தேதி பாகிஸ்தான் பதிலடி தாக்குதலை தொடங்கியது. அதாவது தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அதன்படி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தான் வான் எல்லையில் பறந்து தாக்குதல் நடத்தியது. பக்டிகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மொத்தம் 15 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்கள் கடுமையாக கண்டித்தனர்.
மேலும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று தாலிபான்கள் அறிவித்தனர். இந்நிலையில் தான் தாலிபான்கள் 15 ஆயிரம் போர் வீரர்களை பாகிஸ்தான் எல்லையை நோக்கி அனுப்பி உள்ளனர். அதாவது பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மிர்அலி எனும் எல்லைப்பகுதி உள்ளது. இந்த எல்லை என்பது ஆப்கானிஸ்தானின் பாக்துனிக்வா மாகாணத்தை சேர்ந்தது. இந்நிலையில் தான் தாலிபான்கள் 15,000 படை வீரர்களை மிர்அலி எல்லையில் குவித்து வருகின்றனர்.
முன்னதாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகளை அழைத்து இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. தற்போது அடுத்த கட்டமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் படை வீரர்களை குவித்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும் தீவிர கண்காணிப்பை தொடங்கி உள்ளது. இது இருநாடுகள் இடையே போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications