''3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்''.. புது குண்டை தூக்கிப்போட்ட WHO.. மீள்வது எப்படி?
ஜெனீவா: கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் கொஞ்சம் அடங்கி இருந்த கொரோனா இப்போது மீண்டும் ஆட்டத்தை துவங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தனது உருவத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருவதால் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக இருக்கிறது.
பல்வேறு நாடுகளில் உருமாறிய டெல்டா வைரஸ் மாறுபாடே இரண்டாவது அலைக்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

மூன்றாவது அலை எச்சரிக்கை
கொரோனா மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை ஆரம்பித்து விட்டதாக உலக சுகாதார மையம் புது குண்டை தூக்கி போட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-

காரணம் இதுதான்
துரதிர்ஷ்டவசமாக, நாம் இப்போது கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். டெல்டா மாறுபாட்டின் பரவல், பொது சுகாதார நடவடிக்கைகளின் சீரற்ற பயன்பாடு உள்பட பல்வேறு காரணங்கள் கொரோனா பாதிப்பு அதிகமாக அதிகரிக்க, கொரோனா உயிரிழப்புகள் உயருவதற்கு மிகவும் ஆதாரமாக அமைந்து விட்டது.

டெல்டா மாறுபாடு
வைரஸ் தொடர்ந்து உருவாகி வருகிறது. இதன் விளைவாக மேலும் பரவும் வகைகள் உருவாகின்றன. டெல்டா வைரஸ் மாறுபாடு இப்போது 111-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிறது. பல நாடுகளில் இன்னும் எந்த தடுப்பூசிகளும் கிடைக்கவில்லை, பெரும்பாலான நாடுகள் போதுமான அளவு தடுப்பூசிகள் பெறவில்லை என்று டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.

தடுப்பூசிகளின் முக்கியத்துவம்
செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் குறைந்தது 10 சதவீதத்தினருக்கும், இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 40 சதவீதத்திற்கும், 2022-ம் ஆண்டின் நடுப்பகுதியில் குறைந்தது 70 சதவீதத்திற்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை டெட்ரோஸ் அதானோம் மீண்டும் வலியுறுத்தினார்.
Recommended Video

நோய் தடுப்பு அணுகுமுறை
தடுப்பூசிகள் மட்டுமே தொற்றுநோயைத் தடுக்காது என்பதை வலியுறுத்திய டெட்ரோஸ் அதானோம்,வடிவமைக்கப்பட்ட மற்றும் நிலையான நோய் தடுப்பு அணுகுமுறையை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications