வலுவாக இருக்கிறோம்.. உதவி தேவை இல்லை.. எங்களுக்கு ஆதரவுதான் தேவை.. இஸ்ரேல் தூதர்
ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், "நாங்கள் போதுமான அளவுக்கு வலுவாக இருக்கிறோம் என்றும் எங்களுக்கு உதவி தேவையில்லை, உங்களது ஆதரவு தான் தேவை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கோப்பி ஷோஷானி கூறியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலுக்கு முக்கிய காரணம் காசா பகுதியாகும். இது தற்போது பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காசா பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ள நிலையில் பாலஸ்தீனத்துக்கு எகிப்து, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவு உள்ளது.

இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று காலை இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்ரேல் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று காலை ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் படைகள் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் Al-Aqsa Flood ஆபரேஷன் என பெயர் வைத்துள்ளனர்.
இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அயர்ன் ஸ்வாட்ஸ்' (Operation Iron Swords) என பெயர் வைத்துள்ளது. இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இதனால் இஸ்ரேலில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான மோதலில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி, இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தனது ட்விட் பதிவில் கூறியுள்ளார். இந்த நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், எங்களுக்கு உதவி தேவை இல்லை, ஆதரவுதான் தேவை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் தூதர் கோப்பி ஷோஷானி கூறுகையில், " நாங்கள் போதுமான அளவுக்கு வலுவாக இருக்கிறோம். எங்களுக்கு உதவி தேவையில்லை. ஆனால் உங்கள் ஆதரவும் புரிதலுமே எங்களுக்கு அவசியம். நல்ல மக்களும் உலகில் உள்ள நாடுகளும் இந்தியாவும் இதில் அடங்கும். இது எங்களுக்கு மிக மிக முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications