100% வரி போடுங்க.. நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் பிரஷர்.. சீனா தந்த தரமான பதிலடி.. முற்றுதே மோதல்
பெய்ஜிங்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி போட வேண்டும் என்ற நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரஷர் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்புக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. நான் அதிபராக இருந்தால் இந்த போர் வந்திருக்காது. நான் அமெரிக்க அதிபரானவுடன் அடுத்த 24 மணிநேரத்தில் போரை நிறுத்திவிடுவேன் என்று கூறியவர் டொனால்ட் டிரம்ப். இப்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று 8 மாதம் ஆகிய நிலையில் அவரால் போரை நிறுத்த முடியவில்லை.

இதனால் டிரம்ப் பிற நாடுகள் மீது பழிப்போடுகிறார்.அந்த வகையில் நம் நாடு மற்றும் சீனா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து நம் நாடும், சீனாவும் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதை சுட்டிக்காட்டி உக்ரைன் போரை தொடர ரஷ்யாவுக்கு உதவுவதே சீனா, இந்தியா தான் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
சீனாவுக்கு வரி போட அழுத்தம்
அதுமட்டுமின்றி நம் நாட்டுக்கு 50 சதவீத வரியும், சீனாவுக்கு 30 சதவீத வரியும் விதித்துள்ளார். இதற்கிடையே தான் தற்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி சீனாவுக்கு 50 முதல் 100 சதவீதம் வரி போட வேண்டும் என்று ‛நேட்டோ' நாடுகளுக்கு டிரம்ப் பிரஷர் கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமின்றி நேட்டோ நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இதை செய்தால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்தலாம். மேலும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதிக்க தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
நேட்டோ நாடுகள் எத்தனை?
நேட்டோ அமைப்பில் மொத்தம் 32 நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன. இந்த நாடுகள் வரி விதிக்கும்போது ரஷ்யாவிடம் இருந்து நம் நாடும், சீனாவும் கச்சா எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் நினைக்கிறார். ஆனால் தற்போது வரை நேட்டோ நாடுகள் சீனாவுக்கு எதிராக எந்த வரியும் விதிக்கவில்லை. இதனால் டிரம்ப் தொடர்ந்து நேட்டோ நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
சீனா கடும் கோபம்
இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு டிரம்புக்கு சீனா கடும் பதிலடியை கொடுத்துள்ளது. அதாவது சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஸ்லோவன்யாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது.
நேட்டோ நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, சீனாவுக்கு 50 முதல் 100 சதவீதம் வரி போட வேண்டும் டிரம்ப் கூறியுள்ளாரே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
டிரம்புக்கு பதிலடி
அதற்கு அமைச்சர் வாங் யீ கூறுகையில், ‛‛போர் என்பது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. அதேபோல் தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும். அதேபோல் நாங்கள் எந்த போரிலும் பங்கேற்கவில்லை. போர் தொடர்பான சதிகளிலும் ஈடுபடவில்லை'' என்றார். இதன்மூலம் அவர் அமெரிக்காவை தாக்கி உள்ளார். அதாவது சீனா எந்த போரையும் முன்னெடுக்கவில்லை. அதேவேளையில் அமெரிக்கா பல போர்களில் தலையிட்டுள்ளதை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதன்மூலம் மீண்டும் அமெரிக்கா - சீனா இடையே பிரச்சனை அதிகரிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications