"இந்துக்கள் குறி.." வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை! இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் சொல்வது என்ன! பரபர
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களைக் குறிவைத்துத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதைக் கண்டித்து அங்குள்ள இந்து சமூகத்தினர் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வன்முறை தாக்குதல்கள் தொடர்பாக அந்நாட்டின் இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முகமது யூனுஸ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார்.

தாக்குதல்கள்: ஆனால், அவர் வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய பிறகும் கூட அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை. அங்குச் சிறுபான்மையினராக உள்ள இந்து சமூகத்தினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்கு 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக 205க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதைக் கண்டித்து அங்குள்ள இந்து சமூகத்தினர் மிகப் பெரிய போராட்டத்திலும் இறங்கியுள்ளனர். வங்கதேச தலைநகரான டாக்கா மற்றும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகாங்கில் இந்துக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்துக்களால் அதிரும் வங்கதேசம்.. 7 லட்சம் பேர் குவிந்து போராட்டம்! திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
உச்சத்தில் வன்முறை: கடந்த ஒரு வாரத்தில் இந்துக்களின் வீடுகள் மற்றும் இந்துக்களின் வணிக நிறுவனங்களைக் குறிவைத்துப் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. பல இந்து கோவில்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் இருந்த இரண்டு இந்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கே வன்முறை உச்சம் தொட்டுள்ள நிலையில், வங்கதேச இந்துக்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க அண்டை நாடான இந்தியாவுக்குள் நுழைய முயல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில் தான் அங்கு மிகப் பெரியளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு, சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி இவர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர், இதனால் டாக்கா மற்றும் சிட்டகாங் முடங்கியுள்ளன.
7 லட்சம் பேர்: இந்த போராட்டத்தில் இந்துக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை.. சிறுபான்மையினருக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அங்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர், இஸ்லாமியர்கள் ஆகியோரும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். சிட்டகாங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க செராகி பஹார் சதுக்கத்தில் நடந்த பேரணியில் சுமார் 7 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இதை வலியுறுத்தி அங்கு வசிக்கும் வங்கதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய கருத்து: இதற்கிடையே இந்துக்களின் வன்முறை தொடர்பாக வங்கதேச இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்த அவர், இதுபோன்ற தாக்குதல்களே மிகவும் கொடூரமானவை என்று குறிப்பிட்டார். போராட்டங்களை முன்னின்று நடத்தும் மாணவர் அமைப்பினர், இந்து, கிறிஸ்தவ மற்றும் பவுத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரையும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சிறுபான்மையினரும் இந்த நாட்டு மக்கள் தான்.. உங்களால் (மாணவர் அமைப்பினர்) நாட்டைக் காப்பாற்ற முடிந்தது.. ஆனால், சிறுபான்மை சமூகத்தினரைக் காப்பாற்ற முடியவில்லையா? அவர்கள் நம் சகோதரர்கள் தான்.. நாம் ஒன்றாகப் போராடி வென்றோம். இப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications