பாலஸ்தீனத்தை வரிசையாக அங்கீகரிக்கும் உலக நாடுகள்! இதற்கு என்ன அர்த்தம்? இதனால் காசா போர் முடிவுக்கு வருமா?
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தை இப்போது தனி நாடாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதுபோல பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் சூழலில், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்றால் என்ன! இது காசாவுக்கு ஏன் முக்கியம். களத்தில் இது என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
காசாவில் கடந்த சில ஆண்டுகளாகவே போர் தொடர்ந்தாலும் இப்போது நிலைமை அங்கு மோசமாக இருக்கிறது. அங்குள்ள எல்லாக் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி வருகிறார்கள். காசாவே முழுமையாக அழியும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.

அங்கீகாரம்
இந்தச் சூழலில் தான் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் அங்கீகரித்துள்ளன. பிரான்ஸ் உட்பட மேலும் பல நாடுகள் விரைவில் இந்த அங்கீகாரத்தை வழங்கத் தயாராகி வருகின்றன. ஆனால், இந்த நடவடிக்கை ஹமாஸ் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே எச்சரித்திருந்தார். அமெரிக்காவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்றால் என்ன! இது காசாவுக்கு ஏன் முக்கியம்.. இதை இஸ்ரேல், அமெரிக்கா எதிர்ப்பது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன அர்த்தம்?
பாலஸ்தீனம் என்பது இருக்கும், அதேநேரம் இல்லாத ஒரு நாடு. அதாவது உலகளவில் பாலஸ்தீன நாட்டிற்குக் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் உண்டு. பல நாடுகளில் பாலஸ்தீன தூதரகங்கள் இயங்குகின்றன. ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பாலஸ்தீனம் சார்பில் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால், இஸ்ரேலுடனான மோதல் காரணமாக பாலஸ்தீனத்திற்கு முறையாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் இல்லை. தலைநகரம் இல்லை, ராணுவம் இல்லை.
1990களில் அமைதி ஒப்பந்தங்களுக்குப் பிறகு பாலஸ்தீன நிர்வாகம் உருவாக்கப்பட்ட போதிலும், வேஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால் அதன் நிலப்பரப்புகளையும் மக்களையும் பாலஸ்தீன நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியாகக் கருதப்படும், காசாவில் இஸ்ரேல் இப்போது மிக மோசமான ஒரு போரை நடத்தி வருகிறது.
அடையாளப்பூர்வமானது
பாலஸ்தீனத்தின் இந்த நிலை காரணமாக, அதனைத் தனி நாடாக அங்கீகரிப்பது என்பது பெரும்பாலும் ஒரு அடையாளப்பூர்வ நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்பதைக் காட்டும் ஒரு வலுவான தார்மீக மற்றும் அரசியல் நிலைப்பாடு தான் இது. ஆனால் களத்தில் இது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. எனினும், இந்த அடையாள அங்கீகாரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
முன்னர் பாலஸ்தீனம் என்று குறிப்பிடப்பட்ட பகுதியை 1922 முதல் 1948 வரை பிரிட்டன் ஆட்சி செய்தது. 1948ல் இஸ்ரேல் உருவான நிலையில், அதன் பிறகு பாலஸ்தீனப் பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இஸ்ரேலுக்கு இணையாக ஒரு பாலஸ்தீன நாட்டை உருவாக்கும் முயற்சிகள் பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்தன.
ஐநா சபை
இப்போது ஐ.நா. சபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளில் சுமார் 75% நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஐ.நா. சபையிலும் பாலஸ்தீனம் "நிரந்தர பார்வையாளர் நாடு" (permanent observer state) என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதாவது ஐநா சபையில் நிகழ்வுகளில் பாலஸ்தீனம் கலந்து கொள்ளலாம். ஆனால், வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதே இதன் பொருளாகும்.
இப்போது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் நான்கு நாடுகளின் ஆதரவை பாலஸ்தீனம் பெறுகிறது. ஏற்கனவே 1988ல் ஆண்டு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா எதிர்ப்பு
அமெரிக்கா இதுவரை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. கடந்த காலங்களில் பல அமெரிக்க அதிபர்கள் பாலஸ்தீன நாடு உருவாக ஆதரவு தெரிவித்தனர். இரட்டை நாடு உருவாக்கப்படுவதே ஒரு தீர்வாக இருக்கும் எனக் குறிப்பிட்டனர். ஆனால் தற்போதைய அதிபர் டிரம்ப் பாலஸ்தீனத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்கிறார். மேலும், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகளையும் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக எச்சரிக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் காசாவை அங்கீகரித்துள்ளது தார்மீக ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் முக்கியமான ஒன்று. ஆனால், களத்தில் குறிப்பாகக் காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் இது பெரிய மாற்றத்தைக் கொண்டு வராது.












Click it and Unblock the Notifications