
சுருண்டு விழுந்த பூட்டோ! "அவளை" மறக்க முடியுமா? இம்ரான் கான் மட்டும் தப்பித்தது எப்படி? நடந்தது என்ன
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டது போலவே இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார். பாகிஸ்தான் பிரதமர்கள் பெரும்பாலும் அந்நாட்டு ராணுவத்தை எதிர்க்கவே மாட்டார்கள்.
ராணுவத்தை எதிர்த்தால், பிரதமர்களை அந்த ராணுவமே தீர்த்து கட்டும் என்பதுதான் பாகிஸ்தான் அரசியல் சூழ்நிலை. பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும்.. உண்மையில் அந்நாட்டில் ஆட்சியில் இருப்பது என்னவோ ராணுவம்தான் என்ற கூற்று உள்ளது. அது மீண்டும் அங்கு உண்மை ஆகியுள்ளது.
சதி..‛‛என்னை கொல்ல முயன்ற 3 பேர்’’.. யார் தெரியுமா? குண்டு பாய்ந்து உயிர் தப்பிய இம்ரான் கான் பகீர்

பாகிஸ்தான்
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் பிரதமர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது பாகிஸ்தான் ராணுவம்தான். பாகிஸ்தானில் ராணுவ ஜெனரலாக இருப்பவர்கள் சொல்வதே அங்கு சட்டம் என்ற நிலை நிலவி வருகிறது. ஒருவேளை ஜெனரல்கள் சொல்வதை மீறினால் அங்கு ஆட்சியே கவிழும் நிலை கூட ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்கள் பல ராணுவம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யப்பட்டுள்ளது.

ஆட்சி கவிழ்ந்தது
இம்ரான் கான் கடந்த முறை ஆட்சிக்கு வந்த போது கூட, அவருக்கு ராணுவ ஆதரவு இருந்ததே காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இடையில் அந்நாட்டு உளவுப்படை தளபதி நியமன விவகாரத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் உளவு படை தளபதியாக நதீம் அஞ்சும் கடந்த வருடம் நியமிக்கப்பட இருந்தார். ஆனால் இவரின் நியமனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்தார். உளவுப்படை தளபதி பைஸ் ஹமீத்தான் தொடர்ந்து இதில் தளபதியாக நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் கருதினார். ஆனால் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். நதீம் அஞ்சும்தான் புதிய ஐஎஸ்ஐ தலைவராக வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார்.

மோதல்
இந்த மோதல் விஸ்வரூபம் எடுக்கவே ராணுவம் கொடுத்த அழுத்தத்தால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. அதோடு பாஜ்வா இரவோடு இரவாக இம்ரான் கான் வீட்டிற்கு சென்று, அவரை கன்னத்தில் படாரென அறைந்ததாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் தற்போது இம்ரான் கான் மேற்கொண்ட இஸ்லாமாபாத் பிரச்சார பேரணி ஒன்றில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார். பாகிஸ்தானில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரம்
இந்த பிரச்சாரம் கீழே இருந்த நபர் ஒருவர் இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காலில் இரண்டு இடங்களில் இம்ரான் கானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மூன்று வாரங்களுக்கு நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்.. நான் இம்ரான் கானை கோபத்தில் சுட்டேன். அவர் நாட்டை தவறாக வழி நடத்துகிறார். மக்களை ஏமாற்றுகிறார். நாட்டுக்கு துரோகம் செய்கிறார் என்று பேட்டி அளித்துள்ளார்.

கைது
இவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இம்ரான் கான் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்படியே பெனாசிர் பூட்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டது போலவே அரங்கேற்றப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானில் இதேபோல் ராணுவத்தை எதிர்த்து வந்தார். அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின், அவர் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். 2008ல் இவர் பிரச்சாரம் செய்த போது, இரண்டு பேர் இவரை துப்பாக்கியால் சுட்டனர்.

மரணம்
ராணுவத்தை எதிர்த்து இவர் கடுமையாக குரல் எழுப்பி வந்தார். இதில்தான் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பிரச்சாரத்தில் குண்டு துளைக்காத காரில் சென்ற அவர்.. திடீரென கண்ணாடியை திறந்து மேலே எழுந்து பிரச்சாரம் செய்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார். அதை போலவேதான் இந்த சம்பவமும் நடந்து உள்ளது. ஆனால் இந்த முறை இம்ரான் கான் தப்பி இருக்கிறார். துப்பாக்கியால் சுட்ட நபருக்கு அருகில் இருந் நபர் ஒருவர்.. சுட்டவரின் துப்பாக்கியை கடைசி நேரத்திலும் திரும்பியதால் இம்ரான் கான் உயிர் தப்பினார். இல்லை என்றால் நேற்று மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.