இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.. இந்தியாவுக்கு ஏன் முக்கியம்? பாகிஸ்தான் அரசியலால் யாருக்கு என்ன லாபம்
டெல்லி: பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் முதல்முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தனது ஆட்சியை இழந்துள்ளார்.
Recommended Video
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழு 5 ஆண்டுகள் பதவியில் இருந்தது இல்லை. ஆட்சி கவிழ்ப்பு தொடங்கி பல்வேறு காரணங்களால் அந்நாட்டின் பிரதமர்கள் ஆட்சியை இழப்பது தொடர் கதையாகவே உள்ளது.
இப்போது இம்ரான் கானுக்கும் அதே தான் நடந்துள்ளது. கடந்த 2019இல் புதிய பாகிஸ்தான் என்ற முழக்கத்தை முன் வைத்து ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான் இப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டை பொருத்தவரை ஏப்ரல் 10, 1973இல் அந்நாட்டின் அரசியலமைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்போது 49 ஆண்டுகளுக்குப் பின்னர் சரியாக அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் அப்பதவியில் இருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நீக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் 342 பேர் கொண்ட சபையில் 174 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததால் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார். இதனால் இந்தியாவுக்கு என்ன என்பதைப் பார்க்கலாம்

பாகிஸ்தானின் ஜனநாயகம்
பாகிஸ்தான் ஜனநாயக நாடாக இருந்த போதிலும், அதில் பல குறைபாடுகள் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் இப்போது உச்ச நீதிமன்ற தீர்பை தொடர்ந்து நீண்ட குழப்பங்களுக்குப் பின்னர் இப்போது நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த காலங்களில் இது போல பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால் பாகிஸ்தானில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் ஒருவர் பதவி இழப்பது இதுவே முதல் முறையாகும். இது பாகிஸ்தானில் ஜனநாயகம் எப்படி படிப்படியாக வளர்கிறது என்பதையே காட்டுகிறது.

இம்ரான் கான் வீழ்ச்சி
பாகிஸ்தான் அரசியலில் மின்னல் வேகத்தில் வளர்ந்து உச்சம் தொட்ட இம்ரான் கான், இப்போது பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார். அரசியல் பின்புலம் இல்லாமல் கட்சியைத் தொடங்கிய இம்ரான் கான் கடந்த 2019இல் புதிய பாகிஸ்தான் என்ற முழக்கத்தை முன் வைத்து ஆட்சியைப் பிடித்தார் இம்ரான் கான். தேர்தல் காலகட்டத்தில் அவர் ஏகப்பட்ட வாக்குறுதிகளை முன் வைத்தார். ஆனால், அதை அவரால் நிறைவேற்ற முடியாத நிலையில், மிக விரைவிலேயே காட்சிகள் மாற தொடங்கியது.

பாகிஸ்தான் ராணுவம்
இந்தியாவைப் போல இல்லாமல், கடந்த காலங்களில் பாகிஸ்தான் ராணுவம் ஆட்சியில் தலையிட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைப் பாகிஸ்தான் ராணுவம் கவிழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகப் பாகிஸ்தான் ராணுவம் அதுபோல எந்தவொரு செயலையும் செய்யவில்லை என்றாலும் கூட, அங்கு இன்னும் முக்கிய முடிவுகளை ராணுவமே எடுப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவமே இம்ரான் கானை பிரதமராக தேர்ந்தெடுத்ததாகவும் இருப்பினும் இரு தரப்பிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டதால் இப்போது அவரை நீக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ராணுவத்தின் ஆதரவின்றி எந்த அரசியல் தலைவரும் பதவியில் நீட்டிக்க முடியாது என்பதைப் பாகிஸ்தான் ராணுவம் காட்டியுள்ளதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் போர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் நெருக்கடியும் பாகிஸ்தானில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கிய சமயத்தில் இம்ரான் கான் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். இது உலக நாடுகளின் கோபம் அவர் மீது திரும்பக் காரணமாக அமைந்தது. ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க மாஸ்கோ செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்து இருந்ததாகவும் அதையும் தாண்டி இம்ரான் கான் அங்குச் சென்றது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு இதுவும் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

இந்தியா
பாகிஸ்தானின் அரசியலில் இந்தியா எப்போதுமே ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சிறப்பானதாக இல்லை. இருந்த போதிலும், இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டினார். பாக். நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் அந்நாட்டின் ராணுவ தலையீடு அதிகம் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது பாக். ராணுவத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மீண்டும் ஷரீஃப்
4 ஆண்டுகளுக்கு முன்பு ஷரீஃப் தோற்கடிக்கப்பட்டார். இப்போது இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம் நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷெஹ்பாஸ் ஷரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவர்தான் கொண்டு வந்தார். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவைப் பெறவும் அவர் தான் முயற்சி செய்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான பேச்சிலும் ஷெஸ்பாஸ் ஷரீப் தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்பை நினைவு கூர்ந்தார்.

இந்தியா- பாகிஸ்தான் உறவு
இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் ஷரீப் எப்போதும் ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால் இம்ரான் கான் காலத்தில் அது மிகவும் கடினமானதாகவே இருந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இம்ரான் கான் பல முறை பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியுள்ளார். இது இரு நாட்டு உறவை மோசமாக்கியது. இப்போது அவர் நீக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications