நடுக்கடலில் 'ஹண்டா' வைரஸ் வேட்டை! 3 மரணங்கள், 147 பயணிகள்.. சொகுசு கப்பல் திக்திக் பயணம்
பியூனஸ் அயர்ஸ்: கொரோனாவுக்கு பிறகு சிறு வைரஸ் பாதிப்புகளும் மக்களிடையே பீதியைக் கிளப்பும் சூழலில், இப்போது ஹண்டா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ள சூழலில், எங்கு இது கொரோனாவை போல மீண்டும் ஒரு பெருந்தொற்றாக வெடிக்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
சொகுசு கப்பல் பயணம் என்றாலே ஜாலியாக இருக்கும்.. கடலை ரசித்துக் கொண்டு போகலாம் என நினைப்போம். ஆனால், இங்கு ஒரு சொகுசு கப்பல் பயணமே திகிலாக மாறியுள்ளது. அர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்ட 'MV ஹோண்டியஸ்' (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் அரங்கேறியுள்ள நிகழ்வுகள், ஒரு ஹாரர் த்ரில்லர் படத்தைப் போலவே பயணிகளை உறைய வைத்துள்ளன.

ஹண்டா வைரஸ்
கடந்த ஏப்ரல் 1ம் தேதி அர்ஜென்டினாவின் உசுவாயா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பலில்.. ஏப்ரல் 6ம் தேதியே சில பயணிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. அது சாதாரணக் காய்ச்சல் என்று நினைத்திருந்த வேளையில், மே மாதத் தொடக்கத்தில் நிலைமை விபரீதமானது. இந்தக் கப்பலில் பயணம் செய்த 147 பேரில் இதுவரை 8 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக ஒரு டச்சுத் தம்பதி மற்றும் ஒரு ஜெர்மன் பயணி என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்
என்ன நடந்தது
மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பியதில் அது 'ஆண்டெஸ்' ரக ஹண்டா வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக எலிகள் மூலம் பரவும் இந்த வைரஸ், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்பதுதான் இதில் உள்ள மிகப் பெரிய அச்சம். ஏப்ரல் 11-ம் தேதியே 70 வயது டச்சுப் பயணி ஒருவர் இந்த வைரசால் உயிரிழந்தது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து மருத்துவமனைகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது இந்தக் கப்பல் ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்குப் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, தீவிரப் பரிசோதனைக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
அறிகுறிகள் என்ன!
பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீர், எச்சில் அல்லது மலம் பட்ட இடங்களைத் தொடுவதன் மூலம் இது பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.. இதன் பாதிப்பு ஏற்பட்டால் மரண விகிதம் 50% வரை இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு எனத் தனிப்பட்ட தடுப்பூசியோ அல்லது மருந்தோ கிடையாது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அறிகுறிகளுக்குச் சிகிச்சை வழங்குவார்கள். அது மட்டுமே உயிரைக் காப்பாற்ற உதவும்.
இந்தச் சம்பவம் பயணிகளிடையே ஒருவிதப் பயத்தை ஏற்படுத்தியிருந்தாலும், உலக சுகாதார அமைப்பு இது கொரோனாவோ போன்ற பெருந்தொற்று அச்சுறுத்தல் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு என்றாலும் அது மின்னல் வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருந்தது. இதன் காரணமாகவே வெறும் சில மாதங்களில் அது ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப் போட்டது. ஆனால், இந்த வைரஸ் அவ்வளவு வேகமாகப் பரவாது என்பதால் அச்சம் தேவையில்லை.
கவனம்
நீங்கள் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தால், தங்கும் இடங்களில் எலிகள் நடமாட்டம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதும்.. பயணக் காப்பீடு வைத்திருப்பதும் இப்போது மிக அவசியமாகிறது. வெளியே செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருந்தால் தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்! கொரோனாவுக்குப் பிந்தைய உலகில் ஒரு சிறிய தும்மல் கூட நம்மைப் பதற வைக்கிறது. MV ஹோண்டியஸில் நடந்த இந்த உயிரிழப்புகள் வருத்தமளித்தாலும், இது ஒட்டுமொத்தச் சுற்றுலாத் துறையையும் பாதிக்காது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்












Click it and Unblock the Notifications