"உள்நாட்டு போர்?" வாக்னர் குழு தந்த வார்னிங்.. செம கோபத்தில் புதின்.. ரஷ்யாவில் என்ன தான் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கடந்த ஓராண்டாகவே உக்ரைன் போரில் ரஷ்யா கவனம் செலுத்தி வரும் நிலையில், மறுபுறம் இப்போது அங்கே உள்நாட்டுப் போர் ஏற்படும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் கடந்த ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த போர் ஓராண்டு மேலாக தொடரும் நிலையில், இதை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது.

 What is happening in Russia as Wagner turns against Russia military

மிக பெரிய ராணுவம் எனச் சொல்லப்பட்ட ரஷ்ய ராணுவத்தால் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் போவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்கிடையே ரஷ்யாவுக்கு இப்போது புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே குழப்பமான சூழல் நிலவுகிறது.

உக்ரைன் போர்: இப்போது ரஷ்யாவில் என்ன தான் நடக்கிறது என்பதை பார்க்கலாம். ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய ஆர்வம் காட்டி வந்தது. உக்ரைன் இதில் இணைந்தால் அமெரிக்க ராணுவம் ரஷ்யா மண்ணுக்கு மிக அருகில் வரும். இதைத் தொடர்ந்து எதிர்த்து வந்த புதின், திடீரென கடந்தாண்டு பிப். மாதம் போரை ஆரம்பித்தார். புதின் இதுபோல திடீரென போரை ஆரம்பிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

ரஷ்ய ராணுவம் வலிமையான ஒன்று எனச் சொல்லப்பட்ட நிலையில், போர் சில நாட்களில் அதிகபட்சம் சில வாரங்களில் முடிய வாய்ப்புள்ளதாகவே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், உக்ரைன் உறுதி, உலக நாடுகளின் உதவி என எல்லாம் சேர்ந்து உக்ரைன் போரை ஓராண்டு மேலாகத் தொடர்ந்து காரணமாக அமைந்துவிட்டது. போர் இப்படி மாதக் கணக்கில் தொடர்வதே புதினுக்கு பிரச்சினை தான். இதற்கிடையே அங்கே மற்றொரு புதிய பிரச்சினையாகத் தனியார் ராணுவம் குழுவான வாக்னர் குழு புதினுக்கு சவால் விடுத்துள்ளது.

வாக்னர் குழு: ரஷ்யாவுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுக்கும் வகையில் வாக்னர் குழு கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் நேற்று ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகக் கருத்து கூறியுள்ளார். மேலும், ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானுக்கு தனது படைகளுடன் சென்றுள்ளார். இது அங்கே உள்நாட்டுப் போர் உருவாகும் சூழலை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையே ரஷ்யாவின் உளவுத்துறை, ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், பிரிகோஜினுக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கைப் பதிவு செய்துள்ளது. ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு அழைப்பு விடுப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இவை எல்லாம் கடந்த வெள்ளிக்கிழமை தான் ஆரம்பித்தது. தங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகச் சாடிய வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின், இதனால் பலர் உயிரிழந்துள்ளதாகவும் விமர்சித்தார்.

மிரட்டல்: மேலும், தனது ராணுவத்தில் 25 ஆயிரம் பேர் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ரஷ்யாவுக்கு ராணுவத்திற்குப் பதிலடி கொடுக்கப் போவதாகவும் அறிவித்தார். உக்ரைன் போரை நியாயப்படுத்த ரஷ்யா, எப்படி இது போர் இல்லை எல்லையைப் பாதுகாக்க நடக்கும் சிறப்பு ராணுவ நடவடிக்கை எனக் குறிப்பிட்டது. அதேபோல ப்ரிகோஜினும் இது ஆட்சி கவிழ்ப்போ அல்லது கிளர்ச்சியோ இல்லை என்றும் இது நீதிக்கான பயணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ப்ரிகோஜின் தனது ராணுவத்துடன் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தெற்கு ராணுவ பிரிவின் தலைமையகம் இங்கே தான் உள்ளது. மேலும், சுமார் 10 லட்சம் பேர் இங்கே வசிக்கிறார்கள். இந்த பகுதியைத் தான் வாக்னர் குழு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

ரஷ்ய ராணுவம்: ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் ரஷ்யாவின் உயர்மட்ட ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் தன்னை சந்திக்க வேண்டும் என ப்ரிகோஜின் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் இந்த இருவரையும் வாக்னர் குழு பல மாதங்களாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் தன்னை சந்திக்கவில்லை என்றால் முற்றுகையிடப் போவதாக ப்ரிகோஜின் அறிவித்துள்ளார்.

இருப்பினும், ரஷ்ய ராணுவம் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தாங்கள் வாக்னர் குழு மீது எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், புதினுக்கு நிலைமை அனைத்தும் தெரியும் என்றும் ரஷ்யாவுக்கு ஆபத்தை அளிக்க யார் முயன்றாலும் அவர்களுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திண்டாடும் ரஷ்யாவுக்கு இது புதிய தலைவலியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+