இந்தியாவில் ஏன் தங்கியுள்ளார் ஷேக் ஹசீனா.. வங்கதேசத்தில் அவரது கட்சி கதி என்ன ஆச்சு?
டாக்கா: வங்கதேச வன்முறையால் ஷேக் ஹசீனா இப்போது இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியாவில் எத்தனை காலம் இருக்கப் போகிறார்.. அவர் இந்தியாவுக்கு வந்துவிட்ட நிலையில், அடுத்து அவரது கட்சியின் எதிர்காலம் என்னவாகும் எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதில்களை நாம் பார்க்கலாம்.
வங்கதேச வன்முறை காரணமாகக் கடந்த வாரம் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டார்..

அவர் ஓரிரு நாட்கள் மட்டுமே இந்தியாவில் இருப்பார் என்றும் லண்டனில் புகலிடம் கோர உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், இதில் சில சிக்கல்கள் இருப்பதால் அவர் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்குகிறார்.
வங்கதேசம்: மறுபுறம் வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. அங்கு வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தி நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வர இடைக்கால அரசு முயல்கிறது. இதற்கிடையே அங்கு முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி விரைவில் வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
இப்போது முக்கிய கேள்வி என்னவென்றால், ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் இந்த தேர்தலில் போட்டியிடுமா.. அப்படியே போட்டியிட்டாலும் ஹசீனா இந்தியாவில் இருப்பதால் தலைவராக யார் இருப்பார்.. அக்கட்சியின் எதிர்காலம் என்ன? ஷேக் ஹசீனாவின் எதிர்காலம் என்ன எனப் பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
அரசியல் கட்சியாகத் தொடரும்: இதற்கிடையே வங்கதேச இடைக்கால அரசில் புதிய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சகாவத் ஹொசைன், அவாமி லீக் ஒரு கட்சியாகத் தொடரும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "வங்கதேசத்தின் வளர்ச்சிக்கு அக்கட்சி பல பங்களிப்புகளைச் செய்துள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. தேர்தல் வரும்போது அவாமி லீக் தேர்தலில் போட்டியிட வேண்டும்" என்றார்.
ஹசீனா வங்கதேசம் அழைத்துச் செல்லப்படுவாரா: இப்போது ஷேக் ஹசீனா இந்தியாவில் பாதுகாப்பான இடத்தில் தங்கி இருக்கும் நிலையில், சட்டத் துறை அமைச்சகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவரை வங்கதேசம் அழைத்து வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தால் அதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்று இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில், "சட்டத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே ஹசீனாவை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். அவர் ராஜினாமா செய்துவிட்டார். அவரது ராஜினாமா கடிதம் அதிபரிடம் உள்ளது. இவர் இப்போது எந்த பதவியிலும் இல்லை. எனவே, சட்ட துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே அவரை திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுப்போம். முதலில் சட்டத்துறை தான் இதில் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.
ஹசீனாவின் எதிர்காலம் என்ன: ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியாவுக்குச் சென்றார். மீண்டும் ஷேக் ஹசீனா தாயகம் திரும்ப மாட்டார் என்றே அப்போது அவரது மகன் சஜீப் வசேத் கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "இனிமேல் அவர் வங்கதேசம் செல்ல மாட்டார். சொல்லப்போனால் குடும்பத்தில் யாரும் அங்கே செல்லக் கூடாது எனச் சொல்லியுள்ளார்" என்று கூறியிருந்தார்.
அதேநேரம் அவர் ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் அதற்கு நேர்மாறான கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது ஹசீனா வங்கதேசம் செல்ல விரும்புவதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஹசீனாவின் ஆட்சியில் சில தவறுகள் நடந்ததை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், எல்லா தவறுக்கும் எனது தாய் தான் காரணம் என்று பழி சுமத்த முடியாது. இந்த முறை ஆட்சி செய்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றே அவர் நினைத்தார். வங்கதேசத்தில் இருந்து வெளியேற அவர் நினைத்ததே இல்லை" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications